உக்ரைன் தொடர்பில் அமெரிக்கா - ரஷ்யா பேச்சுவார்த்தையில் புதிய முடிவு... வெளிவரும் புதிய தகவல்
சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்பட்ட உக்ரைன் போர் அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் நாளில், முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
உயர்மட்ட குழு
உக்ரைன் போருக்கு பின்னர் பெருமளவு குறைக்கப்பட்ட தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளது.
அத்துடன், உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரஷ்யாவும் அமெரிக்காவும் தூதரக உறவுகளை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவிக்கையில், இரு நாடுகளும் தூதரக உறவுகளை மேம்படுத்தினால் மட்டுமே சுமூகமாக செயல்பட முடியும் என்றார்.
சவுதி அரேபியாவில் நடந்த இந்த சந்திப்பில் அமெரிக்காவும் ரஷ்யாவும் நெருக்கமான உறவுகளை பேணவும் பொருளாதார ஒத்துழைப்பை ஆராயவும் ஒப்புக்கொண்டுள்ளன.
உக்ரைன் போர் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவுக்கு வந்தால், பொதுவான நலன் சார்ந்த பிரச்சினைகளில் அரசியல்ரீதியாக ரஷ்யாவுடன் ஒத்துழைக்கும் நம்பமுடியாத வாய்ப்புகள் அமெரிக்காவுக்கு உருவாகும் என்றும் வெளிப்படையாக, பொருளாதார ரீதியாக, உலகிற்கு நன்மை ஏற்படுத்தும் உறவாக இது இருக்கும் என்று நம்புவதாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
தடைகளை நீக்க
உக்ரைன் போருக்கு பின்னர் ஜோ பைடன் அரசாங்கம் ரஷ்யாவை சர்வதேச அளவில் மொத்தமாக தனிமைப்படுத்தி வந்ததுடன், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அழுத்தமளித்தும் வந்தது.
தற்போது அந்த நடவடிக்கைகள் அனைத்தும் ட்ரம்ப் நிர்வாகத்தால் நீக்கப்படலாம் என்ற கருத்து கசிந்துள்ளது. உக்ரைன் போர் தொடர்பில் விவாதிக்க முடிவெடுத்த இரு நாடுகளும் தற்போது ஜோ பைடன் நிர்வாகத்தால் போடப்பட்ட தடைகளை நீக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆக்கப்பூர்வமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தரப்பின் பங்கேற்பும் அவசியம் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |