அமெரிக்க-ரஷ்ய அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய அணு ஆயுத சக்திகளான அமேரிக்கா மற்றும் ரஷ்யா கடந்த 10 ஆண்டுகளாக New START எனும் அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்தது.
இந்த ஒப்பந்தம் அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கும் ரஷ்யாவின் அப்போதைய ஜனாதிபதியான டிமிட்ரி மெட்வெடேவிற்கும் இடையே 2010-ல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 2011-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
இந்த ஒப்பந்தம் வரும் 2021, பிப்ரவரி 5-ஆம் திகதியோடு முடிவடைய இருந்த நிலையில், இந்த New START (Strategic Arms Reduction Treaty) ஒப்பந்தத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமெரிக்கா முடிவு செய்தது.
அதற்காக, அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் எடுத்த முன்னெடுப்பில், கடந்த சில நாட்களாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புதன்கிழமை அன்று கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தம் வரும் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் திகதி வரை நீடிக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையில் பனிப்பூர் நடந்துவரும் சுழலில், உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடுகளாக ரஷ்யாவும் அமெரிக்காவும் கொண்டுள்ள சிறப்புப் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் குறிப்புகள் அமெரிக்காவுடன் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.