ஹார்முஸ் முற்றுகை: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் சரமாரி ட்ரோன் தாக்குதல்
ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றை கைப்பற்றியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஹார்முஸ் முற்றுகையில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
நீடித்த அமைதி
ஈரானிய சரக்குக் கப்பலை கைப்பற்றியதை அடுத்து, பதிலடி உறுதி என ஈரான் எச்சரித்ததை அடுத்து, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம், எஞ்சிய இரண்டு நாட்களுக்குக்கூட நீடிக்காமல் போகக்கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் அந்த நடவடிக்கையால் பிராந்தியத்தில் நீடித்த அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளும் தள்ளாட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது,
இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லை என்று ஈரான் தற்போது கூறியுள்ளது. செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தம் காலாவதியாவதற்குள் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைக தொடங்கிவிட அமெரிக்கா எண்ணியிருந்தது.
இந்த நிலையில், உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ள, ஒரு வாரமாக நீடித்து வரும் முடக்கம் இதேபோல் தொடர்ந்து நீடிக்கக்கூடும் என்றே தெரிய வருகிறது.
அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களுக்குத் தொடர்ந்து முற்றுகையிட்டுள்ள நிலையில், ஈரான் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கடல்வழிப் போக்குவரத்தின் மீதான தனது முற்றுகையை நீக்கி, பின்னர் அமெரிக்க முற்றுகையை குறிப்பிட்டு மீண்டும் முடக்கியுள்ளது.
கப்பல் சீனாவிலிருந்து
ஈரானியக் கொடியுடன் கூடிய ஒரு சரக்குக் கப்பல், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அதன் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதனிடையே, அவர்களுடைய கப்பல் முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் அதில் என்ன இருக்கிறது என்பதையும் நாங்கள் பார்த்து வருகிறோம் என்று ஜனாதிபதி ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அந்தக் கப்பல் சீனாவிலிருந்து வந்து கொண்டிருந்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க இராணுவத்தின் இந்த ஆயுதம் ஏந்தியக் கொள்ளைக்கு எதிராக ஈரான் ஆயுதப் படைகள் விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எச்சரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.
தற்போது அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |