கிரீன்லாந்தில் இரண்டு புதிய இராணுவ தளங்களைத் திறக்க அமெரிக்கா திட்டம்
US to open two military bases in Greenland: அமெரிக்கா, கிரீன்லாந்தில் இரண்டு புதிய இராணுவ தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதில் ஒன்று தெற்கு கிரீன்லாந்தின் நார்சசுவாக் பகுதியில், மற்றொன்று கிழக்கு கரையில் உள்ள மேஸ்டர்ஸ்விக் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

மேஸ்டர்ஸ்விக் தற்போது டென்மார்க்கின் சிறப்பு படையணியான Danish dog sled patrol பயன்படுத்தும் இடமாக உள்ளது.
இந்த ஒப்பந்தம், டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கையெழுத்திடப்பட உள்ளது. ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
வெள்ளை மாளிகை, “இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்து மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளது.
அழுத்தத்தால் உருவான ஒப்பந்தம்
டென்மார்க் அரசு, இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் பாதுகாப்பை NATO-வின் கண்காணிப்பில் வைக்கிறது என்று கூறியுள்ளது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கிரீன்லாந்தை கட்டுப்படுத்த வேண்டும் என பல மாதங்களாக அழுத்தம் கொடுத்து வந்ததால், இந்த ஒப்பந்தம் உருவானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரீன்லாந்து மக்களில் பெரும்பாலானோர், அமெரிக்காவின் கட்டுப்பாட்டு முயற்சியை எதிர்த்து வருகின்றனர். இதனால் NATO-வில் தூதரக நெருக்கடி ஏற்பட்டது. அதை சமாளிக்க டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளனர்.
பனிப்போர் காலத்தில், அமெரிக்கா கிரீன்லாந்தில் 17 இராணுவ தளங்களை வைத்திருந்தது. தற்போது பிடுஃபிக் விண்வெளி தளம் மட்டுமே செயல்படுகிறது. அங்கு சுமார் 150 அமெரிக்க இராணுவ வீரர்கள் உள்ளனர்.
இந்த புதிய தளங்கள், ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நிலையை வலுப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |