ஒன்லைன் காதலனுக்காக கொலை செய்ய பிரித்தானியா வந்த அமெரிக்கப் பெண்
ஒன்லைனில் சந்தித்த ஒருவருக்காக, கொலை செய்யவே துணிந்த அமெரிக்கப் பெண்ணொருவர் இன்று பிரித்தானியாவில் சிறையிலடைக்கப்பட்டார்.
அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு...
2019ஆம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமில் தன் வீட்டின் முன்னால் தன் காரிலிருந்து இறங்க முற்பட்டுள்ளார் சிக்கந்தர் அலி என்பவர்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு காரிலிருந்து இறங்கிய நிக்காப் அணிந்த பெண்ணொருவர், அலியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
ஆனால், யார் செய்த புண்ணியமோ, அந்த துப்பாக்கி வெடிக்கவில்லை. காரிலிருந்த அலி அங்கிருந்து காரில் தப்பியோடியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, அலியின் தந்தைக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் அந்தப் பெண். அதில், எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறாய், ஒளிந்து விளையாடியது போதும், அதிர்ஷ்டவசமாக என் துப்பாக்கி வெடிக்காததால் நீ தப்பினாய், உடனே ஆஸ்டா பல்பொருள் அங்காடிக்கு வா, என்று குறிப்பிட்டுள்ளார் அந்தப் பெண்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் அலியின் வீட்டுக்கு வந்த அந்தப் பெண், அவரது வீட்டை நோக்கி இரண்டுமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இந்த காட்சிகள் அனைத்தும் CCTV கமெராக்களில் பதிவாகியுள்ளன.
யார் அந்தப் பெண்?
அந்தப் பெண்ணின் பெயர் எய்மீ பெட்ரோ. தற்போது அவருக்கு 45 வயதாகிறது.
நடந்தது என்னவென்றால், 2018ஆம் ஆண்டு, பர்மிங்காமில், அலியின் தந்தையின் துணிக்கடையில் வேலை செய்த மொஹம்மது அஸ்லாம் (56) என்பவரும், அவரது மகனான மொஹம்மது நபில் நாசீர் (31) என்பவரும் சண்டை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
அதில் ஏற்பட்ட வன்முறையில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அலியின் குடும்பத்தினரை பழிவாங்கக் காத்திருந்திருக்கிறார்கள் இருவரும்.
இந்நிலையில், ஒன்லைனில் நாசீரை சந்தித்த அமெரிக்காவின் விஸ்கான்சினைச் சேர்ந்த எய்மீ பெட்ரோவுக்கு, அவர் மீது கண்மூடித்தனமாக காதல் வந்துள்ளது.
காதலனுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த எய்மீயை தனக்காக கொலை செய்யக் கேட்டிருக்கிறார் நாசீர்.
அதற்கு சம்மதம் தெரிவித்து, அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா வந்து அலியைக் கொல்ல முயன்றிருக்கிறார் எய்மீ.
தப்பியோடிய எய்மீயை, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா பொலிசார் உட்பட பல குழுக்கள் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எய்மீயை ஊடகவியலாளர் ஒருவர் அர்மீனியா நாட்டில் கண்டு பொலிசாருக்கு தகவலளிக்க, பிரித்தானியா கொண்டுவரப்பட்டார் அவர்.
அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று சிறையிலடைக்கப்பட்டுள்ளார் எய்மீ.
மொஹம்மது அஸ்லாமும், அவரது மகனான மொஹம்மது நபில் நாசீரும் கடந்த ஆண்டே சிறையிலடைக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |