மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்... ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கிய அமெரிக்கா
ஹார்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
உறுதியான நடவடிக்கை
சர்வதேச நீர்வழியில் வணிகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கியதற்காகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (Centcom) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்கள் கடந்த மாதம் கையெழுத்தான அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று கூறிய ஈரானின் வெளிவிவகார துணை அமைச்சர், தெஹ்ரான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எச்சரித்தார்.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் 24 மணி நேர இடைவெளிக்குள் மூன்று கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்கானது. உயிர் அபாயம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரான் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறிய அமெரிக்க அதிகாரி ஒருவர், இந்தத் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் குறிப்பிட்டார்.
கத்தார் மற்றும் சவுதி அரேபியாவும் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததோடு, தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய்க் கப்பல் நீரிணைக்குள் அல்லது அதன் அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாகவும், இதற்கு ஈரானே காரணம் என்றும் அவ்விரு நாடுகளும் குற்றம் சாட்டின.
இதனிடையே, ஈரான் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான செயல் தேவையற்றதும், ஆபத்தானதும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என Centcom தங்களது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரான் மீதான எண்ணெய் தடைகளைத் தற்காலிகமாக நீக்கியிருந்த விலக்கு உத்தரவை அமெரிக்க நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமையன்று ரத்து செய்தது.
தீய நோக்கம்
ஈரான் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் உரிமம், கடந்த மாதம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
இதனிடையே, முன்பு வழங்கப்பட்ட விலக்கின் கீழ் அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 17 வரை அனுமதிப்பதாக, நிதியமைச்சகத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு தெரிவித்துள்ளது.

ஈரானின் வெளிவிவகார அமைச்சகம் இந்த நடவடிக்கையை ஒப்பந்த மீறல் என்று குறிப்பிட்டதுடன், இது அமெரிக்க அரசாங்கத்தின் தீய நோக்கம், நிலையற்ற தன்மை மற்றும் நம்பகத்தன்மையின்மை ஆகியவற்றை நிரூபிப்பதாகவும் கூறியது.
மேலும், தங்களது தேசிய நலன்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் தெஹ்ரான் மேற்கொள்ளும் என்றும் வெளிவிவகார அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |