24 மணி நேரத்தில் 41 தொழிலாளர்களை மீட்ட 'எலி வளை'யாளர்கள்.., 17 நாட்களாக போராடி தோற்று போன தொழில்நுட்பம்
இந்திய மாநிலம், உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 17 நாட்களாக சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்ட பெருமை எலி வளையாளர்களையே சேரும்.
அமெரிக்க இயந்திரங்கள்
உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அங்கு, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி அப்படியே மூடியது. இதனால், அங்கு வேலை செய்து கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர்.
இவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்தது. ஓஎன்ஜிசி போன்ற நிலத்தை தோண்டுவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் முதல் டிஆர்டிஓ அமைப்பின் ரோபாட்டுகள் வரை மீட்பதற்கு உதவி செய்தன.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் ஆகர் இயந்திரம், அனுபவம் பெற்ற அர்னால்ட் டிக்ஸ் என பல தரப்பினர் தங்களுடைய உழைப்பை போட்டனர். ஆனால், இத்தனை போராட்டங்களை சந்தித்தும் அவர்களை மீட்க முடியாமல் தோல்வியில் முடிந்தது.
எலி வளையாளர்கள்
பின்னர், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கு எலி வளையாளர்களை வரவழைத்தனர். அவர்கள், அமெரிக்க இயந்திரம் 47 மீட்டர் துளையிட்ட நிலையில், மீதமுள்ள 13 மீட்டர் தொலைவை தங்களுடைய கைவசம் இருக்கும் சாதாரண கருவிகளை கொண்டு 21 மணி நேரத்தில் தோண்டி இரும்புக்குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர்.
இதனைத்தொடர்ந்து, சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியை தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெற்றிகரமாக்கினர்.
வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக 'எலி வளை' சுரங்கங்கள் தோண்டப்பட்டு நிலக்கரி வெட்டப்படுவதை தவிர்க்க, சுரங்க செயல்பாடுகளுக்கு அரசே தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |