ட்ரம்பை நம்புங்கள்... இஸ்ரேலியர்களை கடுமையாகச் சாடிய ஜேடி வேன்ஸ்
ஈரானுடனான டொனால்ட் ட்ரம்பின் ஒப்பந்தத்தை விமர்சிக்கும் இஸ்ரேலியர்கள் விழித்துக்கொண்டு யதார்த்தத்தை உணர வேண்டும் என ஜேடி வேன்ஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.
பகிரங்கமாகக் கேள்வி
ஈரானுடன் புதிதாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் குறித்துத் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படையாகத் தெரிவித்து வரும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை உறுப்பினர்களை அமெரிக்கத் துணை ஜனாதிபதி பகிரங்கமாகக் கண்டித்தார்.

இந்த வாரம் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஈரானில் நிலவும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதும், ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட பரந்த பிரச்சினைகள் குறித்து 60 நாள் பேச்சுவார்த்தைக் காலத்தைத் தொடங்குவதும் ஆகும்.
ஆனால், பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியான அழுத்தங்களை அமெரிக்கா நீக்கியுள்ள நிலையில், ஈரான் இந்த பேச்சுவார்த்தைகளை எந்தளவுக்குத் தீவிரமாக அணுகும் என்று இஸ்ரேலில் உள்ள விமர்சகர்கள் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ட்ரம்பின் மத்தியஸ்தத்தில் காஸா மீது போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததன் பின்னர், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 1000 கடந்துள்ள நிலையில், ஈரான் ஒப்பந்தம் தொடர்பில் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், உலகில் தங்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே சக்திவாய்ந்த கூட்டாளியைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என இஸ்ரேலிய விமர்சகர்களை எச்சரித்து, வியாழக்கிழமையன்று, வேன்ஸ் ஒரு அசாதாரணமான கண்டனத்தை வெளியிட்டார்.
இஸ்ரேலியர்களிடம் ட்ரம்பை நம்புங்கள் என குறிப்பிட்டுள்ள வேன்ஸ், இனியேனும் யதார்த்தத்தை உணர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போதைய தருணத்தில், இஸ்ரேல் தேசத்தின் மீது அனுதாபம் கொண்ட ஒரே ஒரு நாட்டுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே. நான் இஸ்ரேலிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்திருந்தால், உலகம் முழுவதிலும் தனக்கு எஞ்சியிருக்கும் ஒரே வலிமையான கூட்டாளியை நான் தாக்கியிருக்க மாட்டேன் என்றும் வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ உதவிகள்
மேலும், இஸ்ரேலில் தங்களின் மிகப்பெரிய பிரச்சனை அமெரிக்க ஜனாதிபதி என்று நினைப்பவர்கள், விழித்துக்கொண்டு அந்த நாடு இருக்கும் சூழ்நிலையின் யதார்த்தத்தை உணர வேண்டும் என்றார்.
இந்த வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை வெளிப்படையாக விமர்சிக்காமல் நெதன்யாகு கவனமாக இருந்து வரும் நிலையில், அவரது அமைச்சரவையைச் சேர்ந்த சிலர் இது குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரானுடனான ஒப்பந்தத்தை நெதன்யாகு வெளிப்படையாக விமர்சிக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ள வேன்ஸ், ஆனால், மத்திய கிழக்கில் தனது முக்கிய கூட்டாளியான இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் பெருமளவிலான ராணுவ உதவிகள் குறித்து வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளும் பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக கூட்டாகப் போரைத் தொடங்கின, ஆனால் ஈரானுடனான ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் அச்சுறுத்தலுடன் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதை ட்ரம்ப் வெளிப்படையாகவே கண்டித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில், இஸ்ரேல் நாட்டைப் பாதுகாத்த தற்காப்பு ஆயுதங்களில் மூன்றில் இரண்டு பங்கு, அமெரிக்க வரிப்பணத்தில், அமெரிக்க மக்களால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |