நான் நலமுடன் இருக்கேன்னு மனைவியிடம் சொல்லுங்க! வருண்சிங் கடைசியாக பேசிய வார்த்தைகள்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் தனது மனைவியிடம் சில விடயங்களை சொல்ல சொன்னார் என தற்போது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை அவரின் தந்தையான கே பி சிங் வெளியிட்டுள்ளார். 2021 டிசம்பர் 8ம் திகதி குன்னூரில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் பலியான நிலையில், தீ காயங்களுடன் குரூப் கேப்டன் வருண் சிங் உயிர்தப்பினார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி வருண் சிங் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
இந்த நிலையில் வருண் சிங் ஹெலிகாப்டர் விபத்துக்கு பின்னரும் சுயநினைவுடனே இருந்துள்ளார். இது குறித்து அவர் தந்தை கே பி சிங் கூறுகையில், 95 சதவீத தீக்காயத்துடன் என் மகன் வருண் சிங் இருந்த நிலையில் அவரே மீட்பு குழுவினரை நோக்கி சென்று தன்னை அடையாளப்படுத்தி கொண்டார்.
பின்னர் தனது மனைவி கீதாஞ்சலியின் செல்போன் நம்பரை அவர்களிடம் கொடுத்த வருண் சிங் தான் நலமுடன் இருப்பதாக கூறும்படி சொன்னார். இதை தொடர்ந்தே என் மகன் விபத்தில் சிக்கியது எங்களுக்கு தெரிய வந்தது.
இதோடு மற்ற அதிகாரிகள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு உதவி செய்யுமாறும் அவர் மீட்பு குழுவினரிடம் கூறினார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரையில் வருண் சிங் சுயநினைவோடு இருந்தார் என தெரிவித்துள்ளார்.