மதுரோ கைதின் போது அமெரிக்கா பயன்படுத்திய அந்த ஆயுதம்: இரத்த வாந்தியெடுத்த வெனிசுலா இராணுவம்
நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் போது அமெரிக்கா வெனிசுலா வீரர்களுக்கு எதிராக சக்திவாய்ந்த சோனிக் ஆயுதத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
திகிலூட்டும் திறன்கள்
சக்திவாய்ந்த அந்த ஆயுதத்தின் தாக்கத்தால் வெனிசுலா இராணுவ வீரர்களுக்கு மூக்கில் இரத்தம் கசிவு மற்றும் இரத்த வாந்தி ஏற்பட்டது என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை பகல் சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்த கரோலின் லீவிட், அமெரிக்க மக்களே உடனடியாக இதை வாசித்து விடுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் காணொளி, அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்கி மதுரோவை போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்த இரவில் வெனிசுலாவில் பணியாற்றியதாகக் கூறிக்கொண்ட பெயர் குறிப்பிடப்படாத ஒரு இராணுவ வீரர் தமது அனுபவத்தை அதில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மதுரோ கைதின் போது அமெரிக்க இராணுவம் பயன்படுத்திய மர்மமான புதிய ஆயுதத்தின் திகிலூட்டும் திறன்கள் குறித்து அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த ஆயுதத்தில் இருந்து வெளிப்பட்ட மிகவும் தீவிரமான ஒலி அலை வெனிசுலா படைகளை மொத்தமாக முடக்கியதாக அவர் விவரித்தார். திடீரென்று தலை உள்ளிருந்து வெடிப்பது போல் உணர்ந்தேன் என்று அந்த வெனிசுலா பாதுகாப்பு காவலர் கூறியுள்ளார்.
எங்கள் மூக்கிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. சிலர் இரத்த வாந்தி எடுத்தனர். நாங்கள் அசைய முடியாமல் தரையில் சுருண்டு விழுந்தோம் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா எந்த வகையான ஆயுதத்தைப் பயன்படுத்தியது என தெரியாது, ஆனால் எங்களால் எதையும் செய்ய முடியாமல் போனது என்றார். மதுரோவைக் கைது செய்த சில நிமிடங்களுக்கு முன்பு, எங்கள் அனைத்து ரேடார் அமைப்புகளும் செயலிழந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் எட்டு ஹெலிகொப்டர்கள் தரையிறங்கின, அதில் இருந்து சுமார் 20 வீரர்கள் இறங்கினர். இதற்கு முன்னர் இப்படியான ஒரு படையை நாங்கள் எதிர்கொண்டதில்லை. அந்த 20 அமெரிக்க வீரர்களும் நூற்றுக்கணக்கான வெனிசுலா வீரர்களைக் கொன்றனர்.
டிசம்பர் மாதம் தொடக்கத்தில்
ஆனால், ஆகஸ்ட் மாதத்திலிருந்து திட்டமிடப்பட்டு வந்த இந்த நடவடிக்கையில் 20 தளங்களில் இருந்து 150 விமானங்கள் வெனிசுலா முற்றுகையின்போது பயன்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
வெள்ளை மாளிகை அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே மதுரோவைக் கைது செய்யும் நடவடிக்கை தயார் நிலையில் இருந்ததாகவும், ஆனால் காலநிலை தொடர்பில் காத்திருந்ததாகவும், ஜனவரி 3 ஆம் திகதி மதுரோவுக்கு எதிராக நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வெனிசுலாவில் செயல்பட்டு வந்த சிஐஏ உளவாளிகள் மதுரோ மற்றும் அவரது மனைவி புளோரஸின் நகர்வுகளைக் கண்காணித்து வந்தனர். அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக மதுரோவும் மனைவியும் ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு இடத்தில் இரவு தங்கியுள்ளனர்.
ஆனால் ஜனவரி 3 ஆம் திகதி டெல்டா படை வீரர்கள் மதுரோ தங்கியிருந்த குடியிருப்பின் வளாகத்திற்குள் நுழைந்தனர். மதுரோ ஒரு உலோகப் பாதுகாப்பு அறைக்குள் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டார்.
மதுரோ கைது செய்யப்படும் நடவடிக்கையின் போது தங்களின் ஆயுதப்படைகளைச் சேர்ந்த 80 பேரும் பொதுமக்களும் கொல்லப்பட்டதாக வெனிசுலா அதிகாரிகள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |