காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்! தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேற்று இரவு காலமானார்.
குமரி அனந்தன் காலமானார்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான குமரி அனந்தன் அவர்கள் தனது 93வது வயதில் காலமானார்.
வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 8) இரவு உயிரிழந்தார்.
அவருக்கு ஒரு மகனும், முன்னாள் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உட்பட நான்கு மகள்களும் உள்ளனர்.
மறைந்த குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புகழ்பெற்ற அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதி
குமரி அனந்தன் அவர்கள் தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திறம்பட பணியாற்றியதுடன், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் (MP) மக்கள் பணியாற்றியுள்ளார்.
அரசியல் மட்டுமின்றி, குமரி அனந்தன் அவர்கள் "இலக்கிய செல்வர்" என்று அனைவராலும் போற்றப்பட்டார்.
குமரி அனந்தன் சாதனைகள்
இந்திய பாராளுமன்றத்தில் தமிழில் கேள்விகள் கேட்கும் உரிமையை பெற்றுத் தந்ததில் அவரது பங்கு மிக முக்கியமானது.
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சி ஐயரின் நினைவாக மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் மாற்றம் செய்யப்படுவதில் முக்கிய பங்காற்றினார்.
மேலும், தந்தி மற்றும் மணியார்டர் விண்ணப்பங்களில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றவர்.
குமரி அனந்தன் அவர்கள் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவர். விமானங்களில் தமிழ் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அவருக்கு "தகைசால் தமிழர்" விருது வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |