Fact Check: பிரான்சில் போராட்டக்காரர்கள் மீது கார் ஒன்று பாய்ந்ததாக இணையத்தில் உலாவரும் வீடியோ...
பிரான்சில், பொலிசாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.
இந்நிலையில், அப்படி போராட்டம் நடத்தும் மக்களை பழிவாங்குவதற்காக, ஒருவர், காரைக் கொண்டு அவர்கள் மீது மோதியதாகக் கூறப்படும் காட்சி ஒன்று இணையத்தில் உலாவருகிறது.
இஸ்லாமியர்களைக் குறிவைத்ததாக வெளியான செய்தி
வெளியாகியுள்ள வீடியோவில், சாலையோரமாக கூட்டமாக நிற்பவர்கள் மீது கார் ஒன்று வேகமாக சென்று மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது. கார் மோதியதும் மக்கள் சத்தமிட்டபடி ஓடுவதையும் காணலாம்.
அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சிலர், அந்த காரின் சாரதி பிரான்சில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களைக் குறிவைத்து, அவர்களைத் தண்டிப்பதற்காக, அவர்கள் மீது வேண்டுமென்றே காரை மோதியதாக குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவரோ, சாரதி, பிரான்சில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தண்டிக்கும் விடயத்தை தானே கையிலெடுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மை என்ன?
ஆனால், அந்த வீடியோ ஏற்கனவே ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிரான்ஸ் ஊடகம் ஒன்றால் பகிரப்பட்டுள்ளது. பொலிசார் அந்த இளைஞரை சுட்டுக்கொன்றது ஜூன் மாதம் 27ஆம் திகதிதான்.
ஆக, இந்த வீடியோ அதற்கு முன்பே பகிரப்பட்டுள்ளதால், அது அந்த இளைஞர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கூட்டத்தினர் சம்பந்தப்பட்ட காட்சி அல்ல என தெரியவந்துள்ளது.
மேலும், ரஷ்ய ஊடகம் ஒன்றும் அந்த வீடியோ தொடர்பிலான செய்தி ஒன்றை வெளியிடுள்ளது. ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி, பிரான்சிலுள்ள Bordeaux என்னும் இடத்தில் சட்ட விரோதமாக நடந்த கார் ரேஸ் ஒன்றின்போது, வளைவொன்றில் சாரதி காரை வேகமாக திருப்ப, அந்தக் கார் நிலைதடுமாறி பார்வையாளர்கள் மீது மோதியதாகவும், அதில் இரண்டு பேர் படுகாயமடைந்ததாகவும், நான்கு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த காரை ஓட்டிய உள்ளூர் நபர் ஒருவரும், காரிலிருந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது. ஆக., இந்த வீடியோ, பிரான்ஸ் கலவரம் தொடர்புடையதே அல்ல என்பது உறுதியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |