பிரபல நடிகையின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த நபர்கள்: கோபமடைந்த மக்கள்
குறுகிய காலகட்டத்தில் புகழ் பெற்ற இந்திய நடிகைகளில் சாரா அலி கானும் ஒருவர். சமீபத்தில், அதிகம் புகழ் பெறாத விடுதலைப்போராட்ட வீராங்கனை ஒருவராக அவர் நடித்த திரைப்படம் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஏழை மக்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்த சாராவை பாப்பராஸிகள் என்னும் புகைப்படக்கலைஞர்கள் தொந்தரவு செய்துள்ளார்கள்.
கோபமடைந்த மக்கள்
தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளாமல் அமைதியாக தானதர்மங்கள் செய்யும் பிரபலங்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வகையில், சாராவும் மும்பையிலுள்ள ஜூஹூ என்னுமிடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு அங்கிருந்த ஏழை மக்கள் சிலருக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.
பாப்பராஸிகள் என்னும் புகைப்படக்கலைஞர்கள் சிலர் அவரை புகைப்படம் எடுக்க, தயவு செய்து புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் சாரா.
ஆனாலும், விடாமல் அவர்கள் சாராவை புகைப்படம் எடுக்க, அந்த ஏழை மக்களும் கோபமடைந்து அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என சத்தமிடுவதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
சாராவும், உணவுப்பொட்டலங்களை விநியோகித்துவிட்டு வேகவேகமாக நடந்து சென்று தனது காரில் ஏறிச் சென்றுவிட்டார். அப்போதும் அவரை விடாத புகைப்படக்கலைஞர்கள், சாராஜி என அழைத்துக்கொண்டே அவரைப் பின் தொடர்வதையும், வாகனங்களில் சென்றுகொண்டிருந்தவர்கள் சிலரும், தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தங்கள் மொபைலில் சாராவை வீடியோ எடுப்பதையும் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |