மாஸ்கோவிற்கு புறப்பட்ட நாடொன்றின் பிரதமர்: ரஷ்யாவுடன் எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் உள்ள நிலையில் ரஷ்யா, வியட்நாம் நாடுகள் எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
வியட்நாம் பிரதமர்
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் ஆசிய நாடான வியட்நாம், தனது எரிபொருள் இருப்பை வலுப்படுத்த முயற்சி எடுத்துள்ளது.
அதன்படி வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின் (Pham Minh Chinh) ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை முக்கிய ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து வியட்நாம் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், "ரஷ்யாவுடனான உறவுகளை ஆழப்படுத்துவதிலும், வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தித் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதிலும் அவரது பயணம் கவனம் செலுத்தும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹனோய் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், "இந்தப் பயணத்தின்போது அணுமின் நிலையத் திட்டங்கள் தொடர்பான தொடர்ச்சியான முக்கிய ஒப்பந்தங்களும், எரிசக்தி மற்றும் எண்ணெய், எரிவாயுத் துறைகளில் ஒத்துழைப்பும் கையெழுத்திடப்படும். வர்த்தகம், ஆய்வு, பிரித்தெடுத்தல் மற்றும் மனிதவளப் பயிற்சி ஆகிய அனைத்துத் துறைகளிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு எரிசக்தி ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளிடம் உதவி
ஹனோய் வட்டாரங்களின் தகவலின்படி, பிரதமர் ஃபாம் மின் சின் சமீபத்தில் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி கத்தார், குவைத், அல்ஜீரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் எரிபொருள் உதவியைக் கோரியுள்ளார்.
ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினை திங்களன்று ஃபாம் மின் சின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.
அத்துடன் ரஷ்யா - வியட்நாம் வர்த்தகம் தொடர்பான விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
இதில் எரிசக்தி மற்றும் பிற துறைகளில் கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று ரஷ்ய அரசாங்க அறிக்கை கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |