விஜய் அரசியலுக்கு வந்தால் ஓட்டு போய்விடுமென நினைப்பவர்கள் எதிர்க்கலாம் - எஸ்.வி.சேகர்
நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரித்து பேசியுள்ளார்.
உதவிகள் செய்யும் விஜய்
நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வருகிறார். அந்தவகையில், கண் தான திட்டம், குருதி கொடை, குழந்தைகளுக்கு பால், ரொட்டி வழங்கும் திட்டம் போன்ற உதவிகளை செய்து வருகிறார்.
கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பொதுத் தேர்வில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜூன் 17ஆம் திகதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விழா நடைபெற்றது.
சென்னை, நீலாங்கரையில் நடைபெற்ற விழாவில், நடிகர் விஜய் 1600 மாணவ, மாணவிகளுக்கு நின்று பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கினார். மேலும் விழாவில் பேசிய விஜய், மாணவர்களிடம் ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறுங்கள் என்ற பேச்சும் பேசுபொருளானது.
தளபதி விஜய் பயிலகம்
ஜுலை 15ஆம் திகதி காமராஜர் பிறந்த நாளான இன்று, தமிழகம் முழுவதும் உள்ள சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்று, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில 'தளபதி விஜய் பயிலகம்' என்னும் இரவுநேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட உள்ளது.
நடிகர் விஜயின் இந்த நகர்வு அரசியலுக்குள் நுழைவதற்கு ஆயத்தமா என்ற கேள்வி தான் அனைவருக்கும் எழுகிறது. மேலும், விஜய் அரசியலுக்கு வந்தால் எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
விஜய் அரசியலுக்கு வந்தால் ஓட்டு போய்விடும்
இந்நிலையில், நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரித்துள்ளார்.
அவர், "யார் அரசியலுக்கு வந்தாலும் காமராஜர் வழியை பின்பற்றினால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நம் கட்சி பாதிப்படையும் என்றும், ஓட்டு போய்விடும் என்றும் நினைப்பவர்கள் அவரை எதிர்க்கலாம். லட்சக்கணக்கில் ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் சரியான நேரத்தில் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வெற்றி நிச்சயம்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |