234 தொகுதிகளிலும் இரவு நேர பாட சாலை! அரசியலுக்கு க்ரீன் சிக்னல் காட்டும் விஜய்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய், 234 தொகுதிகளிலும் இரவுநேர பாடசாலையை தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவிகள்
நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வருகிறார். அந்தவகையில், கண் தான திட்டம், குருதி கொடை, குழந்தைகளுக்கு பால், ரொட்டி வழங்கும் திட்டம் போன்ற உதவிகளை செய்து வருகிறார்.
கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஜூன் 17 ஆம் திகதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விழா நடைபெற்றது.
சென்னை, நீலாங்கரையில் நடைபெற்ற விழாவில், நடிகர் விஜய் 1600 மாணவ, மாணவிகளுக்கு நின்று பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கினார். மேலும் விழாவில் பேசிய விஜய், மாணவர்களிடம் ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறுங்கள் என்ற பேச்சும் பேசுபொருளானது.
இதனிடையே, கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் 'அசுரன்' பட வசனத்தையும் மேற்கோள் காட்டியும், பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களை சுட்டிக் காட்டியும் விழாவில் விஜய் பேசினார்.
தொகுதி வாரியாக மாணவ மாணவர்களை தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தியது விஜய் அரசியலுக்கு வர ஆயத்தமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இரவு நேர பாடசாலை
இந்நிலையில், நடிகர் விஜய் ஜூலை 15 ஆம் திகதி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் இரவுநேர பாடசாலையை தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்திற்கு படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து வைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு தொகுதிக்கு 4 இடங்களில் இத்திட்டத்தை தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆயத்தமாகி கொண்டிருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |