தலைவனை இழந்து நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பது நமது கடமை - விஜய் பேச்சு
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பது நம் கடமை என விஜய் பேசியுள்ளார்.
விஜய் பிரச்சாரம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த வாரம் திருச்சியில் இருந்து தொடங்கினார்.
ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமைகளில் 2 மாவட்டங்களில் பிரச்சாரம் என்ற வகையில் தனது பிரச்சார திட்டத்தை வகுத்துள்ளார். அதன்படி, இன்று நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், "நாகப்பட்டினம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது.மீன் ஏற்றுமதியில் இந்தியாவில், 2 வது இடத்தில் இருக்கும்நாகப்பட்டினத்தில், அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் குடிசை பகுதிகளில் வசிக்கிறார்கள்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் நம் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு தீர்வு தேட வேண்டும் என்பதை முன்பே வலியுறுத்தியிருக்கிறேன். மீனவர்களோடு நிற்பது என் கடமை.
14 ஆண்டுகளுக்கு முன்பு கூட நாகப்பட்டினத்தில் மீனவர்களை தாக்கியதை கண்டித்து கூட்டம் நடத்தியிருந்தேன். அதனால் நாகையில் நான் வருவது புதிதல்ல.
தாய்ப்பாசம் காட்டிய தலைவன்
மீனவர்களுக்காக குரல் கொடுக்கிற இதே சமயத்தில், நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள். அவர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும், தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கிற அவங்களுக்கான குரல் கொடுக்கிறதும், அவர்களுக்காக நிக்கிறதும் நமது கடமை இல்லையா?
மீனவர்களின் உயிர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு ஈழத்தழிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் ரொம்ப முக்கியம்.
நம்ம மீனவர்கள் படும் இந்த கஷ்டத்தை எல்லாம் பார்த்து வெறும் கடிதம் மட்டும் எழுதிட்டு, அமைதியாக கடந்து செல்லும் நாம் ஒன்றும் கபட நாடகம் ஆடும் திமுக அரசும் இல்லை.
அதேபோல், மற்ற மீனவர்கள் என்றால் இந்திய மீனவர்கள் என்றும், நம்ம மீனவர்கள் என்றால் தமிழக மீனவர்கள் என பிரித்து பேச நாம் பாசிச பாஜகவும் கிடையாது. நிரந்தரமாக இதற்கு தீர்வு காண்பதே நம் திட்டம்" என பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |