அகதிகளாக வந்த மக்களுக்கு உதவிகளை செய்தவர் விஜயகாந்த்: இலங்கை செந்தில் தொண்டமான் உருக்கம்
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்பிறகு மாலையில் கோயம்பேடு கொண்டு வரப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவருக்கு, ரசிகர்களும், திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செந்தில் தொண்டமான் இரங்கல்
அந்தவகையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வெளியிட்ட இரங்கல் பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். விஜயகாந்த் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர்.
விஜயகாந்துடன் பல முறை ஏற்பட்ட சந்திப்பின் போது அவருடைய எண்ணங்களிலும் செயல்களின் ஊடாகவும் அவர் ஒரு போற்றப்படக் வேண்டிய தலைவர் என்பதை தான் அறிந்தேன். எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக உடனுக்குடன் சேவையை செய்யும் அரசியல் தலைவர்.
இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்ட இவர். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களுக்காக பல உதவிகளை செய்துள்ளார். பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர். இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும்.
நடிகர் விஜயகாந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |