கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குரு பூஜை.., 25 ஆயிரம் பேருக்கு நாளை அன்னதானம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க அக்கட்சியினர் முடிவு செய்து உள்ளனர்.
இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை நாளை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.
இந்த குரு பூஜையில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா தலைமையில் நாளை காலை 8.30 மணி அளவில் கோயம்பேடு மேம்பாலத்தை ஒட்டியுள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.
இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
தேமுதிக அலுவலகத்தை ஊர்வலம் வந்தடைந்ததும் அங்கு கட்சி நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்கிறார்கள்.
இதனையொட்டி கேப்டன் விஜயகாந்த் ஆலயத்துக்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.
25 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவிற்கு நாளை அன்னதானம் நடைபெறுகிறது.
கேப்டனின் முதலாம் ஆண்டு குரு பூஜையில் தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று மரியாதை செலுத்த இருப்பதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளார்கள்.
மேலும், அவரது நினைவிடத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |