ஸ்ரீமதியின் உடல் அடக்கம்! மண்ணின் ஈரம் கூட காயாத நிலையில் மாணவி சரளாவின் மர்ம மரணம்: விஜயகாந்த் அறிக்கை
தமிழகத்தில் பள்ளி மாணவிகளின் மர்மமான முறையில் இறப்பது, தற்கொலைக்கு முயற்சிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்று நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதனைத் தொடர்ந்து சேலம், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் திருவள்ளூர் பள்ளி மாணவி சரளா தற்கொலை செய்துகொண்டது பெற்றோர்கள் இடையில் அச்சத்தையும், பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது. தமிழகத்தில் தொடரும் இதுபோன்ற துயர சம்பவங்கள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் திருவள்ளூரில் மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
மாணவி ஸ்ரீமதி மரணத்தைத் தொடர்ந்து சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், திருப்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், செங்கல்பட்டில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முடிவு எதற்கும் தீர்வாகாது என்பதை மாணவ, மாணவிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் மாணவர்கள் அதனை மனதில் வைத்து பூட்டி கொள்ளாமல் பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ மனம் விட்டு சொல்லுங்கள். அப்போதுதான் அதற்கு உரிய தீர்வு காண முடியும்.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் இறப்பதும், தற்கொலைக்கு முயல்வது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
— Vijayakant (@iVijayakant) July 26, 2022
பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க @CMOTamilnadu உத்தரவிட வேண்டும். pic.twitter.com/qOlLbd8KSq
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் உங்களை விட்டு நீங்கும். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தி வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மனதை உறுதியோடு வைத்துக்கொண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
மேலும், பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.