புலியை பிடிக்க தவறிய அதிகாரிகளை கூண்டில் அடைத்த கிராம மக்கள்
புலியை பிடிக்க தவறிய அதிகாரிகளை கோபத்தில் கிராம மக்கள் கூண்டில் அடைத்துள்ளனர்.
அதிகாரிகள் கூண்டில் அடைப்பு
இந்திய மாநிலமான கர்நாடகாவில் புலியை பிடிக்க தவறிய வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் சேர்ந்து கூண்டில் அடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள பொம்மலாபுர கிராம மக்கள் கோபமடைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்தனர்.
பந்திப்பூர் இடையக மண்டலத்தில் கால்நடைகள் மற்றும் மனிதர்கள் மீது அங்கு சுற்றி திரிந்த புலி ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் புலியை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறுகின்றனர்.
மேலும், வனத்துறையினர் விலங்குகளைப் பிடிக்கவோ அல்லது கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவோ தவறிவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள் அந்தப் பகுதிக்கு வந்த வன ஊழியர்களை, புலியைப் பிடிக்க அமைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அடைத்தனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி அதிகாரிகளை விடுவிக்க வைத்தனர்.
மேலும், விவசாயத் தலைவர் ஹொன்னுரு பிரகாஷ் தலைமையில், இறந்த கால்நடைகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், புலியை பிடிக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |