மணிப்பூரை அடுத்து ஹரியானாவில் வன்முறை.. 5 பேர் பலி.. என்ன காரணம்?
இந்திய மாநிலம் ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் வன்முறை
இந்திய மாநிலமான மணிப்பூரில் இரண்டு இன மக்களுக்கு ஏற்பட்ட வன்முறை சம்பவமானது நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் நேற்றிரவு நடந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் மாவட்டத்தில் நடந்த மத ஊர்வலத்தில் தான் இந்த வன்முறை வெடித்துள்ளது.
நூஹ் மாவட்டத்தில் தொடங்கிய வன்முறை குருகிராம், ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியதால் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வன்முறை கலவரத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நீரஜ் மற்றும் குர்சேவக் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்ட பொலிசார் காயமடைந்தனர்.
நூஹ் மாவட்டத்தில் பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் இணைந்து நடத்திய ஊர்வலத்தில் கல்வீச்சுகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னரே, இரு அமைப்பினருக்கும் மோதல் வெடித்துள்ளதாக தகவல் கூறுகின்றன.
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் நூஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை பல பகுதிகளுக்கும் பரவியது.
காரணம் என்ன?
2 முஸ்லிம்களை கொன்று குற்றம் சாட்டப்பட்ட பஜ்ரங் தளத் தலைவர் மோனு மானேசர் மத ஊர்வலத்தில் கலந்து கொண்டதே இந்த வன்முறைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வன்முறையை தடுத்து நிறுத்த ஹரியானா அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |