நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், திருமணமான 7 நாட்களில் உயிரிழந்த கடற்படை அதிகாரி தன் மனைவியுடன் கடைசியாக எடுத்ததாக கூறப்படும் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆனால், அந்த வீடியோவில் இருப்பது அந்த அதிகாரியும் அவரது மனைவியும் அல்ல என தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
நாங்கள் உயிருடன் இருக்கிறோம்...
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் ஒருவர் கடற்படை அதிகாரியான வினய் (Vinay Narwal, 26). வினய்க்கும் ஹிமான்ஷி (Himanshi Sowami) என்னும் பெண்ணுக்கும் 7 நாட்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்திருந்தது.
இந்நிலையில், தாக்குதல் நடைபெறுவதற்கு முன் வினயும் ஹிமான்ஷியும் எடுத்ததாக கூறப்படும் ரீல்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இதற்கிடையில், அந்த வீடியோவிலிருப்பது வினய் அல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
யார் அந்த தம்பதி?
அத்துடன், ’அந்த வீடியோவிலிருப்பது நாங்கள், நாங்கள் உயிருடன் இருக்கிறோம்’ என ஆஷிஷ் (Ashish Sehrawat), யாஷிகா(Yashika Sharma) என்னும் தம்பதியர் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் ஆஷிஷ், அந்த வீடியோ இம்மாதம் 14ஆம் திகதி, காஷ்மீருக்கு தானும் தன் மனைவியும் விடுமுறைக்குச் சென்றபோது எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
அதற்கான ஆதாரத்தையும் தம்பதியர் ஊடகம் ஒன்றிடம் சமர்ப்பித்துள்ளார்கள்.
நாங்கள் உயிருடன் இருக்கிறோம், எங்கள் வீடியோ எப்படி இப்படி தவறாக பரப்பட்டது என்பது தெரியவில்லை என்றும், துயர நிகழ்வு ஒன்றுடன் தொடர்பு படுத்தி தங்கள் வீடியோ தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது வேதனையை அளிப்பதாகவும் தம்பதியர் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் உயிருடன் இருக்கும்போதே இரங்கல் செய்திகள் வருவதால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், கொல்லப்பட்ட கடற்படை வீரர் குடும்பத்துக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளவும் அவர்கள் தவறவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |