விஜயகாந்த் அய்யா வாழும்போதே சாமி: நினைவிடத்தில் உருக்கத்துடன் பேசிய நடிகர் விஷால்
நடிகர் விஷால் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த மாதம் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திய நிலையில் விஷால் உட்பட பல நடிகர்கள் வெளிநாடுகளில் இருந்ததால் நேரில் வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.
குறிப்பாக நடிகர் விஷால் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு சோகத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்ற நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 'கலையுலகில் விஜயகாந்த் சிறந்த நடிகர். பொதுமக்கள் மத்தியிலும் அவர் நல்ல மனிதர். தைரியமான அரசியல்வாதி. பொதுவாக ஒருவர் இறந்தால் அவரை சாமி என்று கூப்பிடுவார்கள். ஆனால், விஜயகாந்த் அய்யா இருக்கும்போதே அவரைப் பலரும் சாமி என்று கூப்பிட்டு இருக்கிறார்கள்.
அவர் மீட்டுத் தந்த நடிகர் சங்கத்தில் நான் பொதுச் செயலாளராக இருக்கிறேன். அவரது தைரியத்தை முன்னுதாரணமாக வைத்து தான் நாங்களும் செயல்பட்டு வருகிறோம். அவரது மறைவின்போது என்னால் நேரில் வரமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
அதற்கு அவரிடம் ''மன்னிச்சுரு சாமி'' எனக் கேட்டுக் கொள்கிறேன். கடைசி நேரத்தில் அவருடன் இருந்து நான் காலைத் தொட்டிருக்க வேண்டும். அது என்னால் முடியவில்லை' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |