புடினின் காதலிக்கு சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட சிக்கல்: வெளியேற்ற கோரிக்கை
உக்ரைன் நெருக்கடி காரணமாக சுவிட்சர்லாந்தில் இரகசிய இடத்தில் வாழ்ந்துவரும் ரஷ்ய ஜனாதிபதியின் காதலியை வெளியேற்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் காதலி 38 வயதான Alina Kabaeva தமது பிள்ளைகளுடன் சுவிட்சர்லாந்தில் இரகசிய இடத்தில் வாழ்ந்து வருகிறார். தற்போது உக்ரைன் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதால், புடினுக்கு ஆதரவானவர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புடின் ஆதரவு கோடீஸ்வரர்கள் பலர் பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். மட்டுமின்றி, பலரது சொத்துக்களும் வங்கி சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, ரஷ்யாவில் புடினுக்கு எதிரானவர்களும் உக்ரேனியர்களும் இணைந்து கோரிக்கை முன்வைத்துள்ளனர். அதில், Alina Kabaeva-வை உடனடியாக சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், Alina Kabaeva விளாடிமிர் புடினுடன் இணைந்திருக்க இதுவே சரியான தருணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்யாவின் கொடூர தக்குதலுக்கு அப்பாவி உக்ரைன் மக்கள் கொத்தாக பலியாகி வரும் நிலையிலும், புடின் அரசாங்கத்தின் முக்கியமானவர்களை சுவிஸ் நிர்வாகம் உபசரித்து வருகிறது எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து எப்போதும் ஒரு நடுநிலை நாடு, அதனால் புடினின் காதலி Alina Kabaeva-வை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்புவது தான் முறையான நடவடிக்கையாக இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் ரஷ்யா, பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் குடிமக்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு சுவிஸ் அதிகாரிகளிடம் முறையிடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.
குறித்த கோரிக்கை மனுவுக்கு சுமார் 55,000 மக்கள் ஆதரவளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.