கற்பனையில் கூட இப்படி நடந்திருக்காது.., வயநாடு மக்களை மீட்க சென்ற கோயம்புத்தூர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உருக்கம்
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க சென்ற கோயம்புத்தூர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கிய 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், நிலச்சரிவில் சிக்கிய 100 பேரின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை.
தொடர்ந்து 2-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 4 குழுக்களாக 150 மீட்புப்படையினர் மீட்புப்பணியை செய்து வருகின்றனர்.
அதோடு, தன்னார்வலர்களும், ஆம்புலஸ் ஓட்டுநர்களும், ராணுவ மருத்துவ வாகனம் என மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அங்கு சென்றுள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உருக்கம்
அந்தவகையில் தமிழக மாவட்டம் கோவை, மேட்டுப்பாளையத்திலிருந்து 50 -க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அங்கு சென்றுள்ளனர். தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு அவர்கள் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள சூழ்நிலையை பற்றி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹக்கீம் என்பவர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் அந்த வீடியோவில், "நாங்கள் இருக்கும் இடத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு நடந்துள்ள சம்பவம் கற்பனைக்கு கூட நடக்காத சம்பவம். கார்கள், வீடுகள் என அனைத்தும் புதைந்துள்ளது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணி தொய்வாக இருந்தாலும் அனைத்து துறையினரும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |