எங்களுக்கு தடுப்பூசி கிடைக்காவிட்டால் மொத்த ஏற்றுமதியையும் தடுத்துவிடுவோம்: ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மிரட்டல்
தங்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி கிடைக்காவிட்டால், மொத்த ஏற்றுமதியையும் தடுத்துவிடுவோம் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கவேண்டிய ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி மருந்தை முதலில் வழங்காவிட்டால், மொத்த ஏற்றுமதியையும் தடுத்துவிடுவோம் என ஐரோப்பிய ஒன்றிய தலைவரான Ursula von der Leyen மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரித்தானிய ஸ்வீடன் நிறுவனமான ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுமானால், அது தங்கள் உறுப்பு நாடுகள் வழியாகத்தான் வரவேண்டும் என்றும், அதை தடை செய்ய தங்களால் இயலும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் முன் ஐரோப்பாவுக்கு வழங்கவேண்டிய தடுப்பூசியை வழங்கவேண்டும், இதுதான் ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு இந்த மிரட்டல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி! ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பல கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை வேகப்படுத்த தடுமாறிவரும் நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அளிப்பதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் வாக்களித்திருந்த 90 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தில், 30 சதவிகிதத்தை மட்டுமே அது டெலிவரி செய்துள்ளதாக Ursula தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தயாரிப்பு மையங்களில் தடுப்பு மருந்து தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாலேயே ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் விளக்கமளிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தாரோ, உங்களால் பிரித்தானியாவுக்கு மட்டும் சொன்ன தடுப்பூசியை சொன்ன நேரத்தில் வழங்க முடிகிறதே என மல்லுக்கு நிற்கிறார்கள்.
ஆக, இது தங்களுக்கு மருந்து கிடைக்கவில்லை என்பதைவிட, பிரித்தானியாவுக்கு ஒழுங்காக கிடைக்கிறதே என்ற வயிற்றெரிச்சல் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.