பிரித்தானியா ஒருபோதும் அவர்களிடம் சரணடையாது... பிரதமர் ஸ்டார்மர் ஆவேசம்
வன்முறை, பயம் மற்றும் பிரிவினையின் அடையாளமாக தேசியக் கொடியைப் பயன்படுத்த விரும்புவோரிடம் பிரித்தானியா சரணடையாது என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
தோலின் நிறம் காரணமாக
நமது கொடி பன்முகத்தன்மை கொண்ட நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மக்கள் தங்கள் பின்னணி அல்லது தோலின் நிறம் காரணமாக நமது தெருக்களில் மிரட்டப்படுவதை தாம் அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், நாட்டை ஒருங்கிணைப்போம் என 150,000 பேர்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய பேரணி ஒன்றை முன்னெடுத்த நிலையிலே, பிரதமர் ஸ்டார்மரின் கருத்து வெளியாகியுள்ளது.
அமைதி வழியில் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ள ஸ்டார்மர், ஆனால், காவல்துறை அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்வதைத் தடுத்து தாக்குவதையோ அல்லது தெருக்களில் சாதாரண மக்களின் பின்னணி அல்லது அவர்களின் தோலின் நிறம் காரணமாக அச்சுறுத்தப்படுவதையோ தமது அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.
விட்டுக்கொடுக்க மாட்டோம்
சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் பெருமையுடன் கட்டமைக்கப்பட்ட நாடு பிரித்தானியா. நமது கொடி பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டைக் குறிக்கிறது,
வன்முறை, பயம் மற்றும் பிரிவினையின் அடையாளமாக அதைப் பயன்படுத்துபவர்களிடம் அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.
சனிக்கிழமை டாமி ராபின்சன் தலைமையில் நடந்த புலம்பெயர் மக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், 26 பொலிசார் காயமடைந்துள்ளனர். அதில் நால்வர் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர். வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |