திருமணம், வெளிநாட்டுப் பயணங்கள் வேண்டாம்... தங்கம் வாங்காதீர்: இந்தியப் பிரதமர் வலியுறுத்தல்
மத்திய கிழக்கு விவகாரம் இன்னும் தீர்வை எட்டாத நிலையில், பெட்ரோலியம், டீசல் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க நாட்டிற்கு உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி குடிமக்களை வலியுறுத்தியுள்ளார்.
வீட்டிலிருந்து பணிபுரிதல்
இந்திய மக்கள் இனி பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும் தேவையின்றி இனி தங்கம் வாங்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசபக்தி என்பது எல்லையில் ஒருவரின் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருப்பது மட்டுமல்ல. இக்கட்டானக் காலங்களில், பொறுப்புடன் வாழ்வதும், நமது அன்றாட வாழ்வில் தேசத்திற்கான கடமைகளை நிறைவேற்றுவதுமாகும் என மோடி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விவகாரங்களால் ஏற்படும் உலகளாவிய பொருளாதாரச் சீர்குலைவுகள், விநியோக முடக்கத்தால் ஏற்படும் சவால்கள் மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை இந்தியா எதிர்கொள்ள கூட்டுப் பங்கேற்பு அவசியம் எனவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகள் உள்ள இடங்களில் அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும், கார்-பூலிங் முறையைத் தெரிவு செய்வதன் மூலமும், சரக்குகளைக் கொண்டு செல்ல இரயில்வேக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு மோடி இந்திய மக்களை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மின்சார வாகனங்களின் பயன்பாட்டையும் அவர் ஊக்குவித்துள்ளார். மேலும், தேசிய நலன் கருதி, வீட்டிலிருந்து பணிபுரிதல், இணையவழி மாநாடுகள் மற்றும் மெய்நிகர் கூட்டங்கள் உள்ளிட்ட கோவிட் கால செயல்திறன் நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தவும் மோடி அழைப்பு விடுத்தார்.
மட்டுமின்றி, அந்நியச் செலாவணிக் கையிருப்பைச் சேமிப்பதற்காக, வெளிநாட்டுப் பயணங்களையும் வெளிநாட்டுத் திருமணங்களையும் தவிர்க்குமாறு மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஓராண்டுக்கு தேவையின்றி தங்க நகைகளை வாங்குவதைத் தவிர்க்குமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது தேசியப் பொருளாதாரத்திற்கும் தனிநபர் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று வலியுறுத்திய அவர், குடும்பங்கள் அதனைக் குறைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் இரசாயன உரங்களின் பயன்பாட்டை 50 சதவீதம் குறைக்கவும், விவசாயத்தில் டீசல் பம்புகளுக்குப் பதிலாக சூரிய சக்தியில் இயங்கும் பாசனப் பம்புகளைப் பயன்படுத்தவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அந்நியச் செலாவணி
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்த நிலையில், அதுவரை கப்பல் போக்குவரத்திற்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் இருந்த ஹார்முஸ் நீரிணையில், போர் தொடர்பான அச்சம் காரணமாக கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அத்துடன், எதிரி நாடுகளின் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என்றும், மீறினால் தாக்குதல் உறுதி என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
போர்ச் சூழலில் கப்பல்களுக்கான காப்பீடு முடக்கப்பட்டதை அடுத்து, பல நிறுவனங்கள் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தியது. இதன் விளைவாக எண்ணெய் விலைகள் அதிகரித்தது.

எண்ணெய் விலை உயர்வினால் ஏற்பட்ட தொடர் விளைவுகளின் காரணமாக, வேறு பல இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் சீராக உயர்ந்து வருவதால், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது.
ஈரான் போர் மற்றும் அமெரிக்காவின் கடும் நிபந்தனைகள் காரணமாக, வளைகுடாப் பகுதியில் தற்போதும் சுமார் 1,500 கப்பல்களும் அவற்றின் பணியாளர்களும் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள், ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க ஒரு சர்வதேசக் கூட்டணியை அமைக்கத் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |