எவர் கிவன் கப்பலின் தற்போதைய நிலை என்ன? போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 422 கப்பல்கள்! வெளியான முக்கிய தகவல்கள்
சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டப்பிறகு அதன் தற்போதையை நிலை மற்றும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் குறித்தும் சில முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்தின் சூயஸ் கால்வாயில் மார்ச் 23-ஆம் திகதி, மணல் புயல் காரணமாக குறுக்கும் நெடுக்குமாக Ever Given சரக்கு கப்பல் சிக்கிக்கொண்டது.
அந்த கப்பல் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு திங்கள்கிழமை மிதக்கவைக்கப்பட்டு, அப்பகுதியிலிருந்து நீக்கப்பட்டது.
224,000 டன் கொள்கலன் கொண்ட Ever Given கப்பலை மிதக்க வைக்க, சுமார் 30,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டதாகவும், கப்பலை இழுக்க மொத்தம் 11 இழுவைப்படகுகள் மற்றும் 2 சக்திவாய்ந்த கடல் இழுவை கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
400 மீட்டர் நீளமுள்ள Ever Given கப்பல் சேனலிலிருந்து அகற்றப்பட்ட நிலையில், சூயஸ் கால்வாயை இரண்டு பகுதிகளாக பிரித்து மத்தியில் இருக்கக்கூடிய Great Bitter ஏரிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு வைத்து, அது மீண்டும் கடல்வழியில் பிரச்சினையின்றி பயணிக்க முடியுமா, அல்லது ஏதேனும் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என ஆய்வு செய்யப்படவுள்ளதாக, அதனை குத்தகைக்கு விட்டுள்ள Evergreen Line நிறுவனம் கூறியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கால்வாயில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், சுமார் 422 கப்பல்கள் கால்வாயின் இரண்டு நுழைவாயில்களிலும் உள்ள கடல் பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.
அந்த அனைத்து கப்பல்களையும் 4 நாட்களில் கால்வாயைக் கடக்க வைக்க முடியும் என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் (SCA) தலைவர் Osama Rabie தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலைக்குள் குறைந்து 113 கப்பல்கள் கால்வாயை இரு திசைகளிலும் கடந்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக Rabie தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான எவர் கிவனுக்கு ஒத்த கப்பல்கள் பாதுகாப்பாக கால்வாய் வழியாக செல்லக்கூடும் என்றும், அத்தகைய கப்பல்களை ஒப்புக்கொள்வதில் SCA தனது கொள்கையை மாற்றாது என்றும் அவர் கூறினார்.


