டிரம்ப் புடின் பேச்சுவார்த்தை; உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யா கேட்பது என்ன?
பேச்சுவார்த்தைக்கு 2 நாட்களே உள்ள நிலையில், ரஷ்யா படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
டிரம்ப் புடின் பேச்சுவார்த்தை
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரை நிறுத்துவது தொடர்பாக, வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புடின், அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில், போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விட்டுக்கொடுக்குமாறு உக்ரைனை வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், நிலத்தை ஒரு போதும் விட்டுத்தர மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டான்பஸ் ஏன் முக்கியம்?
இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு 2 நாட்களே உள்ள நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பஸ்(Donbas) மாகாணத்தில் ரஷ்யா படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
அங்குள்ள முக்கிய நகரான யாப்லுனிகாவை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், டான்பஸ் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது.
தொழில்துறை பகுதியான இங்கு, ரஷ்யா மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் ரஷ்யர்களின் உரிமைகளை உக்ரைன் மீறுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியிருந்தது.
மேலும், 2014 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினை அமைப்புகளும் இங்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
ரஷ்யா எதிர்பார்ப்பது என்ன?
டொனெட்ஸ், லுஹான்ஸ்க், சபோரிஷியா, கெர்சன் ஆகிய பகுதிகளின் உரிமையை உக்ரைன் கைவிட்டு, ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
நேட்டோவில் உறுப்பினராகும் விருப்பத்தை உக்ரைன் நிரந்தரமாக கைவிட வேண்டும்.
உக்ரைனில் வாழும் ரஷ்யா மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
உக்ரைனில், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்கு சர்வதேச சட்டம் அங்கீகாரம் வழங்க கோரும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |