தாலிபான்கள் பயம்- கனடா ஆசை! பறக்கும் விமானத்தில் இருந்து விழுந்த நபர் யார்? குடும்பத்தினரின் கண்ணீர் வார்த்தைகள்
காபூலில் புறப்பட்ட விமானத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் கனடாவில் புதிய வாழ்க்கையை துவங்குவதை எதிர்நோக்கி காத்திருந்ததாக குடும்பத்தினர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதால், அங்கிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற முயற்சியில், காபூல் விமானநிலையத்தில் திரண்டனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் அனுப்பப்பட்டிருந்த இராணுவ விமானம் மூலம் வெளியேறியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தாலிபான்களிடம் இருந்து தப்பிப்பதற்காக காபூல் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க இராணுவவிமானத்திற்கு சொந்தமான விமானத்தின் டயர் மற்றும் இறக்கையில் ஏறியதால், மூன்று பேர் விமானம் பறக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகமல் இருந்தது. இந்நிலையில், தற்போது உயிரிழந்தவர்களில் ஒருவரின் பெயர் Reza என்பது தெரியவந்துள்ளது.
17 வயது மதிக்கத்தக்க இந்த இளைஞன், தாலிபான்களிடம் இருந்து தப்பித்து கனடாவில் புதிய வாழ்க்கையை துவங்குவதை எதிர்நோக்கி காத்திருந்ததாக குடும்பத்தினர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளனர்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், விமானத்தின் மேல் இருந்து கீழே விழுந்த நபர்களில் Reza என்பவரும் ஒருவர், இவர் கனடாவில் புதிய வாழ்க்கையை துவங்குவான் என்று அவனுடைய குடும்பம் மிகுந்த நம்பிக்கையில் இருந்தது.
ஆனால், அவர் உயிரிழந்த தகவலை அறிந்து குடும்பத்தினர் கடும் வேதனையில் உள்ளனர். குறித்த இளைஞன் தாலிபான்களிடம் இருந்து தப்பிப்பதற்காக காபூல் விமானநிலையத்திற்கு தன்னுடைய 16 வயது சகோதரர் ஆன Kabeer உடன் Reza சென்றுள்ளார்.
உயிரிழந்த Reza-வின் உடல் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுவிட்டது. இருப்பினும் அவரின் குடும்பத்தினர் Kabeer-ஐ தேடி வருகின்றனர். Reza-வின் குடும்பத்தினருக்கு உறவினர் ஒருவர் தொலைப்பேசியின் மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையிலே, அவரது குடும்பத்தினர் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
மேலும், தற்போது Kabeer எங்கிருக்கிறார் என்பது தெரியாத காரணத்தினால், குடும்பத்தினர் அவரை தேடி வருகின்றனர். அவர் உயிருடன் இருப்பார் என்று நம்பிக்கையில் உள்ளனர்.
இது குறித்து அவர்களின் உறவினர் ஒருவர், நாங்கள் ஒவ்வொரு மருத்துவமனைக்கு சென்று வருகிறோம். ஆனால் இதுவரை Kabeer-ஐ பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
அவரின் தாயார் மிகந்த வேதனையில் உள்ளார். இவர்களுடன் எட்டு பேர் உடன்பிறந்தவர்கள், அதில் சிறுவர்களான இவர்கள், கனடா மற்றும் அமெரிக்காவிற்கு 20,000 பேர் இடமாற்றம் செய்யப்படுவதாக வந்த வதந்தியை நம்பி, விமானநிலையத்திற்கு சென்றனர்.
இவர்கள் தாலிபான் ஆட்சியை பார்த்தே இல்லை. இதனால் அவர்கள் மிகுந்த அச்சத்தில் அங்கு சென்ற போது இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டதாக கூறியுள்ளார்.