வாய்ப்பு தராத இந்தியா ஆடவர் அணி - மகளிர் அணியை சாம்பியனாக்கிய அமோல் மஸும்தார்
2025 மகளிர் உலகக்கோப்பையை முதல்முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

கோப்பை வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அமோல் மஸும்தார்
இந்த மகளிர் அணியின் வெற்றிக்கு, அணியின் தலைமை பயிற்சியாளர் அமோல் மஸும்தார் முக்கிய காரணமாக கருதப்படுகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமோல் மஸும்தாருக்கு கடைசி வரை அந்த வாய்ப்பு அமையவில்லை. சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் தான் இவருக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
1994 முதல் 2013 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய அவர், 171 போட்டிகளில் விளையாடி 60 அரைசதம் மற்றும் 30 சதம் உட்பட 11,167 ஓட்டங்கள் குவித்தும் அவருக்கு இந்திய தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

மேலும், தனது முதல் போட்டியிலே 260 ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை படைத்த இவர், அடுத்த டெண்டுல்கர் என கருதப்பட்டார்.
2014 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதன் பின்னர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, 23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகியவற்றின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்பட்டார்.

மேலும், தென்ஆப்பிரிக்கா தேசிய அணியின் இடைக்கால பயிற்சியாளராக சில காலம் செயல்பட்டார். நெதர்லாந்து தேசிய துடுப்பாட்ட ஆலோசகராக செயல்பட்டார்.
அதன் பின்னர் 2023 ஆம் ஆண்டில் மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளாராக அமோல் மஸும்தாரை பிசிசிஐ நியமித்தது.
அதன் பின்னர் வீராங்கனைகளின் உடல்தகுதியில் கவனம் செலுத்தி, பீல்டிங் ஆகியவற்றை மேம்படுத்தி மகளிர் முதல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

தனக்கு தேசிய அணியில் கிடைக்காத வாய்ப்பை, தனது பயிற்சியின் மூலம் அணியை சாம்பியனாக்கி சாதித்து கொண்டார்.
பெருமை கொள்கின்றேன்
இந்த வெற்றி குறித்து பேசிய அவர், "எங்கள் அணியை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். உலக கோப்பை வென்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

எங்கள் வீராங்கனைகள் நம்ப முடியாத ஒரு சாதனையை செய்திருக்கிறார்கள். இதற்கான பாராட்டுக்கள் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் சேர வேண்டும்.
இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் எங்கள் அணி வீராங்கனைகளுக்கு இருக்கின்றது. இதற்காக அவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
ஷெபாலியின் செயல்பாட்டை ஒரே வார்த்தையில் மேஜிக்கல் எனக் கூறுவேன். அரையிறுதியில்தான் அணிக்குள் வந்தார். ஓட்டங்கள் அடித்து, விக்கெட்டும் எடுத்து கொடுத்தார், அசத்திவிட்டார்" என பேசினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |