ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு; அடுத்த துணை ஜனாதிபதி யார்? தேர்தல் எப்போது?
இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த குடியரசு துணைத் தலைவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா
74 வயதான ஜெகதீப் தன்கர்(jagdeep dhankhar), கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றார்.
நேற்று, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், மாநிலங்களவையின் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
2027 ஆம் ஆண்டு வரை அவரது பதவிக்காலம் உள்ள நிலையில், அவரது ராஜினாமா முடிவு, இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்பதாக அறிவித்துள்ள நிலையில், அடுத்த துணை குடியரசு தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போட்டியிட தகுதிகள்
குடியரசு துணைத் தலைவராக தகுதி பெற, ஒரு வேட்பாளர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
ஒரு வேட்பாளரை குறைந்தபட்சம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்து, மேலும் 20 பேர் வழிமொழிய வேண்டும்.
தேர்தல் முறை
விதிகளின்படி, குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த 6 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 66 வது பிரிவின்படி, துணை ஜனாதிபதி பாராளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஒரு தேர்வு குழுவால் (Electoral college) தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் மூலம் தேர்வு நடக்கும்.
புதிய குடியரசு துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, ராஜ்யசபா துணைத் தலைவர் அவையின் நடவடிக்கைகளை நடத்த முடியும்.
யாருக்கு வாய்ப்பு?
2020 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை துணை தலைவராக உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி.யான ஹரிவன்ஷ் நாராயண் சிங்(harivansh narayan singh) தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குடியரசுத் துணைத் தலைவராகும் முன், தன்கர் மேற்கு வங்க ஆளுநராக இருந்தால், அதே போல் மற்றொரு மாநில ஆளுநரோ அல்லது பாஜக மூத்த அமைச்சாரோ தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில், பீஹார் ஆளுநர் ஆரிப் முகமதுகான், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |