உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோ வந்துள்ள ட்ரம்ப் பிரதிநிதி: யார் அவர்?
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தால் ரஷ்யா மீது பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்ததைத் தொடர்ந்து, ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க தரப்பில், ட்ரம்பின் பிரதிநிதியாக ஒருவர் மாஸ்கோ வந்தடைந்துள்ளார்.
யார் அவர்?
ட்ரம்பின் பிரதிநிதியாக மாஸ்கோ வந்துள்ள நபரின் பெயர், ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) என்பதாகும்.
நியூயார்க் மாகாணத்திலுள்ள Bronx என்னுமிடத்தில் பிறந்த ஸ்டீவ் சட்டத்தரணியாக பயிற்சி பெற்றவர் ஆவார்.
கோடீஸ்வரரும், ரியல் எஸ்டேட் உரிமையாளருமான ஸ்டீவ், ட்ரம்பை நீண்டகால நண்பர் என அழைக்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கு முன் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, ஸ்டீவுக்கு ஒரு சிறிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியானபோது, மத்திய கிழக்கு பகுதியில் போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார் ஸ்டீவ்.
ட்ரம்ப் சம்மதிக்க, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் நல்ல பலனளித்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது.
அத்துடன், பாலஸ்தீன சிறைக்கைதிகளுக்கு பதிலாக ஹமாஸ் பிடித்துவைத்திருந்த இஸ்ரேல் நாட்டவர்களான பிணைக்கைதிகள் சிலரும் விடுவிக்கப்பட்டார்கள்.
ஆக, தற்போது ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் ஸ்டீவ்.
இருந்தாலும், ஸ்டீவ் தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
சென்ற மாதம் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்த ஸ்டீவ், புடினுடன் தான் மூன்று மணி நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும், தனக்கும் புடினுக்கும் இடையே நல்ல உறவும் நட்பும் உருவானதாகவும் தெரிவித்த விடயம் இப்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |