புடின் - ட்ரம்ப் சந்திப்பு... அலாஸ்காவை தெரிவு செய்ததன் வியக்கவைக்கும் பின்னணி
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக விவாதிக்க ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ஜனாதிபதி ட்ரம்ப் அலாஸ்காவில் சந்திக்க இருப்பதன் பின்னணி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அலாஸ்கா மாகாணம்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ட்ரம்ப் மற்றும் புடின் சந்திப்பு முன்னெடுக்கப்பட உள்ளது. குறித்த மாகாணமானது 1867 வரையில் ரஷ்ய பிராந்தியமாகவே இருந்துள்ளது.
பொருளாதரா நெருக்கடி காரணமாக ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் மன்னர் 7.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அலாஸ்காவை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார்.
தற்போது அதே ரஷ்யாவின் தலைவர் ஒருவர் நிலம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா தலைவர் ஒருவருடன் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க தயாராகிறார்.
பெரிங் ஜலசந்தியின் குறுக்கே, அலாஸ்காவின் பிரதான நிலப்பகுதிக்கும் ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான மிகக் குறுகிய தூரம் தோராயமாக 55 மைல்கள்.
ஆனால், மாஸ்கோவிலிருந்து அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜுக்கு விமானத்தில் சுமார் ஒன்பது மணி நேரத்தில் சென்றுவிடலாம். ஜனாதிபதி ட்ரம்பிற்கும் வாஷிங்டன் டிசியிலிருந்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் பயணிக்க, எட்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கும்.
கைது பயமின்றி
உக்ரைனில் இருந்தும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளில் இருந்தும் மிகத் தொலைவில் அமைந்துள்ளது அலாஸ்கா. மட்டுமின்றி, கைது பயமின்றி விளாடிமிர் புடின் விஜயம் செய்ய பாதுகாப்பான இடம் இந்த அலாஸ்கா.
மார்ச் 2023ல் உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு சிறார்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தியது தொடர்பான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட புடின், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் இன்னும் தேடப்படுகிறார்.
புடினுக்கு எதிராக கைதாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யா அல்லது அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆதரப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |