மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?
வயது வித்தியாசம் இன்றி பலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை தான் மலச்சிக்கல்.
எது மலச்சிக்கல்?
வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது. மலம் இறுகிப்போவது. மலம் கழிப்பதில் சிக்கல். மலம் முழுவதுமாகப் போகவில்லை என்கிற உணர்வு, மலம் கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்’ என்று அழைக்கிறோம்.
அடிப்படைக் காரணம்
நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல் என்று பயணம் செய்து தன்னிடமுள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கை உணவாகப் பெருங்குடலுக்கு வரும். அதில் 80 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும்.
இந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சி எடுத்துக்கொண்டு சுமார் 250 மி.லி. அளவில் மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை. சமயங்களில் அது தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் மலம் கட்டியாகி மலச்சிக்கலை ஏற்படுத்தும். இப்படித் தண்ணீர் அதிகமாக உறிஞ்சப்படுவதை ஊக்கப்படுத்தப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்த்தால் மலச்சிக்கல் ஏற்படாது. அந்தக் காரணங்கள்?
தூண்டும் காரணிகள்
மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணி நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது. நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது.
தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன.
அடுத்து, தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும்.