தஜிகிஸ்தான் விமான தளத்தை விட்டு வெளியேறிய இந்தியா - என்ன காரணம்?
தஜிகிஸ்தானில் உள்ள அயினி விமான தளத்தை விட்டு வெளியேறியதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அய்னி விமானப்படை தளம்
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பே அருகே அமைந்துள்ள அய்னி விமானப்படை தளத்தை(ayni airbase), கடந்த 2002 ஆம் ஆண்டில் இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்தியா சீரமைத்தது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் நிதி உதவியுடன், இந்திய ராணுவமும், எல்லை சாலைகள் அமைப்பு (BRO) இந்த விமான தளத்தை சீரமைத்தது.
சுமார் 100 மில்லியன் டொலர் செலவில், விமான ஓடுபாதையை 3,200 மீட்டராக விரிவுபடுத்தியது, விமான ஹேங்கர்களை உருவாக்கியது, எரிபொருள் நிரப்பும் அமைப்புகளை நிறுவியது.
இந்தியா இங்கு நிரந்தரமாக படைகளை நிலைநிறுத்தவில்லை என்றாலும், 3 இராணுவ ஹெலிகாப்டர்களை இயக்கியது. மேலும், 2014 ஆம் ஆண்டு முதல் Sukhoi Su-30 போன்ற போர் விமானங்களைக்கூட சில காலகட்டத்திற்கு நிலைநிறுத்தியிருந்தது.

இது ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதோடு, பாகிஸ்தானுக்கும் அருகில் இருந்ததால், இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தளமாக கருதப்பட்டது.
வெளியேற காரணம் என்ன?
ஆனால், இந்த ஒப்பந்தம் 2022 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த நிலையில், தஜிகிஸ்தான் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்ததால் இந்தியா அந்த தளத்தை விட்டு வெளியேறியது.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா தனது பணியாளர்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை திரும்பப் பெறுவதை முடிவுக்கு கொண்டுவந்தது. அதன் பின்னர் இந்த தளத்தை ரஷ்யா படைகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
3 ஆண்டுகள் கழித்து தற்போது அய்னி விமான தளத்தை விட்டு வெளியேறியதை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

மத்திய ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனா மற்றும் ரஷ்யாவின் அழுத்தம் காரணமாக, தஜிகிஸ்தான் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது அங்கிருந்து இந்தியர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற, இந்த விமான தளம் முக்கிய தளவாட மையமாக செயல்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |