இந்த நகரத்தில் 64 நாட்களுக்கு சூரியனை பார்க்க முடியாது - ஏன் தெரியுமா?
உட்கியாக்விக் நகரில் 64 நாட்களுக்கு சூரியன் தோன்றாமல் இருக்கும் காரணத்தை பார்க்கலாம்.
துருவ இரவு
பொதுவாக உலகின் பெரும்பகுதிகளில், சூரியன் தோன்றும் பகலும், நிலவு தோன்றும் இரவும் மாறி மாறி காணப்படும். ஆனால் ஒரு நகரில் 64 நாட்களுக்கு சூரிய தோன்றாமல் இருக்கும்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உட்கியாக்விக்(utqiagvik) நகரில், சுமார் 5,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நகரில், 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் நவம்பர் 18 ஆம் திகதி நடைபெற்றது.
இனி அடுத்த சூரிய உதயம் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 22 ஆம் திகதியே தோன்றும்.

இந்த நகரம் ஆர்க்டிக் பெருங்கடலின் கரையில் இருந்து 300 மைல்கள் தொலைவில், பூமியின் 71.17 வட அட்சரேகையில் அமைந்துள்ளதால், இந்த காலகட்டத்தில், சூரியன் நகரின் அடிவானத்திற்கு கீழே இருக்கும். இந்த நிகழ்வு "துருவ இரவு" (polar night) என்று அழைக்கப்படுகிறது.
இருந்தாலும் நகர் முற்றிலுமாக இருளில் மூழ்கி விடாமல், மங்கலான வெளிச்சத்தில் இருக்கும். ஆனால் சூரியன் இல்லாததால் கடுமையான குளிர் நிலவும்.
நள்ளிரவு சூரியன்
ஆனால் இதற்கு மாற்றாக மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை இரவே தோன்றாமல் 3 மாதங்களுக்கு பகல் இருக்கும். இந்த நிகழ்வு “நள்ளிரவு சூரியன்” (Midnight Sun) என அழைக்கப்படுகிறது.

சூரியன் 24 மணி நேரமும் அடிவானத்திற்கு மேலே இருப்பதால் இரவிலும் வெளிச்சம் காணப்படும்.
இந்த நிகழ்வுக்கான முக்கிய காரணம் பூமியின் அச்சு சாய்வு. பூமி அதன் அச்சில் சுமார் 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் சுழல்கிறது.
ஒவ்வொரு வருடமும் நிகழும் இந்த நிகழ்விற்கு அங்குள்ள மக்கள் மின் விளக்குகள் உதவியுடன் வாழ பழகி விட்டனர்.

துருவ இரவின் போது வானம் வண்ணமயமாக தோன்றுவதை காண உலகம் முழுவதும் இருந்து அலாஸ்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |