தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியது எப்படி? அமெரிக்க படை பின்வாங்கியது ஏன்? முழு தகவல்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அமெரிக்க படை பின் வாங்கியது ஏன் என்பது தொடர்பான முழு விவரம் வெளியாகியுள்ளது.
உலகமே இன்று உற்று நோக்கும் ஒரு நாடாக ஆப்கானிஸ்தான் மாறிவிட்டது. பலரும் ஆப்கானிஸ்தானுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏனெனில், இத்தனை நாட்கள் ஜனநாயக ஆட்சியில் இருந்த ஆப்கானிஸ்தான், இப்போது தாலிபான்கள் கை வசம் வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம். அமெரிக்க படை பின்வாங்கியது தான், அமெரிக்க படை பின்வாங்கிய இருபதே நாட்களில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தனை கைப்பற்றிவிட்டனர்.
இருபது ஆண்டுகளுக்கு பின்பு, மீண்டும் ஆப்கானிஸ்தானில் தாலீபான்கள் ஆட்சி அமைக்கவுள்ளனர்.
நேற்று, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலுக்குள் நுழைந்தவுடன், நாட்டின் ஜனாதிபதியாக இருந்த Ashraf Ghani பதவி விலகியதோடு, நாட்டை விட்டு வெளியேறி, தாஜிகிஸ்தானுக்கு சென்றுவிட்டார்.
போரால் காபூல் அழிவதை விரும்பவில்லை. எண்ணற்ற தேசபக்தர்கள் உயிரிழப்பதைத் தடுக்கவே இந்த முடிவை எடுத்தேன் என்று அவர் கூறிவிட்டார்.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் படைவீரர்கள், உலகின் அதிநவீன போர்க்கருவிகள், சக்தி வாய்ந்த போர் விமானங்கள் என இத்தனையும் இருந்தும் வெறும் 75 ஆயிரம் பேர் கொண்ட தாலிபன் படையை வீழ்த்த முடியாமல் அமெரிக்கா பின் வாங்கியதற்கு சில காரணங்கள் இருக்கிறது.
டிரம்ப் ஆட்சி காலத்தில், தாலிபான் அமைப்புகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தாலிபான்கள் ஒரு வாக்குறுதி கொடுத்துள்ளனர். அதாவது, ஆப்கானிஸ்தான் மண்ணில் அல்-கொய்தா அமைப்புக்கோ, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கோ புகலிடம் தர மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இது போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் போது, அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் வந்தது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி Ashraf Ghani தங்கள் நாட்டில் வெளிநாட்டு படைகள் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, ஜோ பைடன் அமெரிக்க படைகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதுவே அமெரிக்க படைகள் பின் வாங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், ஆப்கானிஸ்தானுக்கு புதுப் பெயராக, இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்று பெயர் வைத்துள்ளனர்.
ஒரு நாட்டில்சில தீவிரவாதிகள் இருந்தாலே அது உலகத்துக்கு மாபெரும் ஆபத்தாக மாறும், அதுவே ஒரு தேசத்தையே தீவிரவாத அமைப்பு ஒன்று ஆட்சி செய்தால் உலகம் என்ன ஆகும் என்பதற்குப் பாடம் ஆப்கானிஸ்தான்.
வெறும் ஐந்து ஆண்டுகள்தான் அவர்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர். அப்போது அவர்கள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் உலகத்துக்கும் அது கொடுந்துயர் காலமாக இருந்தது.
ஆண்களுக்கு தாடியைக் கட்டாயமாக்கி, பெண் கல்வியை ஒழித்து, பெண்கள் பணிக்குச் செல்வதை மறுத்து, டெலிவிஷன் உள்ளிட்ட பொழுதுபோக்குகளைத் தடை செய்து நாட்டை இன்னும் பின்னோக்கி கொண்டு சென்றனர்.
இப்போது மீண்டும் அவர்கள் கையில் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளதால், மீண்டும் இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி தான் செல்லப்போகின்றனர் என்பது தான் உண்மை.