ஒரே போட்டியில் தங்கள் முதல் சதத்தை பதிவு செய்த மே.தீவுகள் அணி வீரர்கள்!
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தங்கள் முதல் சதத்தை பதிவு செய்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ஷாய் ஹாப் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஷாமர் ப்ரூக்ஸ் தொடக்க வீரர் கைல் மேயெர்ஸுடன் கைகோர்த்தார். இருவரும் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சுக்கு தண்ணீ காட்டினார். இவர்களை ஆட்டமிழக்க செய்ய நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் போராடினர்.
மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கைல் மேயெர்ஸ் சதம் விளாசினார். 6வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இதுதான் முதல் சதம் ஆகும். தொடர்ந்து சிக்ஸர்களை பறக்க விட்ட அவர், 120 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
Photo Credit: Twitter (@KNCBcricket)
மறுமுனையில் அதிரடி காட்டிய ப்ரூக்ஸ் கடைசி ஓவரில் தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தினை விளாசினார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 115 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் எடுத்தார். இவர்களின் ஆட்டத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் குவித்தது.
Photo Credit: Twitter (@windiescricket)