நெருப்பு கோளமாகும் விமானம்... தனது மரணத்தை அன்றே கணித்த எவ்ஜெனி பிரிகோஜின்
ரஷ்ய கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் முன்னர் ஒருமுறை தமது மரணம் குறித்து தெரிவித்த கருத்துகள் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விமானம் வானில் வெடித்துச் சிதறும்
சுமார் 40 நொடிகள் கொண்ட அந்த காணொளியில், நாட்டிற்கு எதிராக செயல்படுவதைவிட கொல்லப்படுவதே மேல் எனவும் விமானம் ஒன்று வானில் வெடித்துச் சிதறும் எனவும் எவ்ஜெனி பிரிகோஜின் குறிப்பிட்டுள்ளார்.
@ap
தற்போது, விமான விபத்து ஒன்றிலேயே எவ்ஜெனி பிரிகோஜின் கொல்லப்பட்டுள்ளதும், அவர் பயணித்த விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்ததாக ஒரு கருத்தும், ரஷ்ய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக ஒரு கருத்தும் வெளிப்படையாக கூறப்பட்டு வருகிறது.
இதனிடையே, ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கையில் மாஸ்கோவின் வடமேற்கில் விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தில் வாக்னர் குழுவின் தலைவர் இருந்ததாக உறுதி செய்துள்ளதாகவும், அந்த விபத்தில் சிக்கிய எவரும் உயிருடன் தப்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ரஷ்ய தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஏற்பட்டு சரியாக 2 மாதங்களுக்கு பின்னர் விமான விபத்து ஒன்றில் சிக்கி எவ்ஜெனி பிரிகோஜின் கொல்லப்பட்டுள்ளார்.
தேசப்பற்றுமிக்க எவரும் இல்லை
மட்டுமின்றி, எவ்ஜெனி பிரிகோஜின் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் பரப்புரை செய்துவருவது வடிகட்டிய பொய் எனவும் ரஷ்ய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
@ap
தாம் பயணிக்கும் விமானம் விபத்துக்குள்ளாகலாம் என எவ்ஜெனி பிரிகோஜின் கூறும் அந்த காணொளி ஏப்ரல் 29ம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ரஷ்ய தலைமைக்கு உண்மையான கள நிலவரத்தை எடுத்துச்சொல்ல தேசப்பற்றுமிக்க எவரும் இல்லை எனவும், இதனால் ரஷ்யா மிக மோசமான பேரழிவை எதிர்கொள்ள இருக்கிறது எனவும் எவ்ஜெனி பிரிகோஜின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ராணுவத்தின் உயர் மட்டத்தில் செயல்படுபவர்களுக்கு தேசப்பற்றில்லை என குறிப்பிட்டுள்ள எவ்ஜெனி பிரிகோஜின், உண்மையை வெளிப்படையாக கூற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உண்மையை வெளிப்படையாக நேர்மையாக கூறுவதால், நான் கொல்லப்படலாம் எனவும் எவ்ஜெனி பிரிகோஜின் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவர்களை நாம் அனுசரித்து செல்ல மறுத்தால், கண்டிப்பாக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்குவது உறுதி என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |