சமரசத்திற்கு வாய்ப்பில்லை... ட்ரம்ப் நிர்வாகம் தொடர்பில் ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட புதிய முன்மொழிவுகளை ஈரான் பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அமைப்பு சனிக்கிழமை தெரிவித்தது.
தேசத்தின் நலன்
அதேவேளையில், தங்களது பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்காவுடன் எந்தவித சமரசத்திற்கும் உட்பட மாட்டார்கள் என்றும் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அமைப்பு எச்சரித்தது.

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்திய நாட்களில், பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஒரு இடைத்தரகராகவும் மத்தியஸ்தராகவும் தெஹ்ரானில் இருக்கும் நிலையில், அமெரிக்கர்களால் புதிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை ஈரான் தற்போது பரிசீலித்து வருகிறது, ஆனால் இதுவரை பதிலளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும், ஈரானின் பேச்சுவார்த்தைக் குழு, மிகச் சிறிய சமரசத்தையோ, பின்வாங்கலையோ அல்லது மென்மையாகவோ நடந்துகொள்ளாது; அத்துடன், ஈரானிய தேசத்தின் நலன்களைத் தனது முழு பலத்துடன் பாதுகாக்கும் என பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தான் பிரதான மத்தியஸ்தராக உருவெடுத்துள்ளதுடன், கடந்த வாரம் நடத்திய முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தன.
மேற்பார்வையையும் கட்டுப்பாடும்
இதனிடையே, தங்களது துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தொடர் முற்றுகையின் காரணமாக, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்தப் புதிய முன்மொழிவுகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டன.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக தகவல் வெளியானதும், அமெரிக்காவை மிரட்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும், போரின் திட்டவட்டமான முடிவு வரும் வரை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தின் மீது மேற்பார்வையையும் கட்டுப்பாட்டையும் அமுல்படுத்துவதில் ஈரான் உறுதியாக உள்ளது என்றும், அமெரிக்காவின் முற்றுகையானது நிபந்தனைக்குட்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட மறுதிறப்பைக் கூடத் தடுத்துவிடும் என்றும் உயர்மட்ட தேசியப் பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது.

மட்டுமின்றி, அத்தகைய மறுதிறப்பானது, கப்பல்களுக்கு ஈரான் போக்குவரத்துச் சான்றிதழ்களை வழங்குவதையும், அத்துடன் பாதுகாப்பு, பத்திரத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்தக் கோருவதையும் உள்ளடக்கும் என்றுன் அந்த கவுன்சில் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |