கைதான பிரித்தானிய வீரர் உளவாளி... போர்க் கைதி அல்ல: பகிரங்க மிரட்டல் விடுத்த ரஷ்யா
உக்ரைனில் ரஷ்ய துருப்புகளிடம் சரணடைந்த பிரித்தானிய வீரரை போர்க் கைதியாக கருத முடியாது என ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனின் மரியுபோல் நகரில் நடந்த கடுமையான போருக்கு மத்தியில், வெடிப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட, இக்கட்டான சூழலில் ரஷ்ய துருப்புகளிடம் சரணடைந்துள்ளார் பிரித்தானிய வீரர் 28 வயதான ஐடன் அஸ்லின்.
ஆனால், சரணடைந்துள்ள பிரித்தானிய வீரர் தொடர்பில் ஜெனிவா ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக கூறியுள்ள ரஷ்யா, சிறைபிடிக்கப்பட்ட பிரித்தானிய வீரர் உக்ரைனின் கூலிப்படை என நிரூபிக்க முயன்று வருகிறது.
மட்டுமின்றி ரஷ்ய அரசு சார்பு தொலைக்காட்சியில் அவர் தொடர்பான காட்சிகளையும் ஒளிபரப்பியுள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்ட ஐடன் அஸ்லின் தொடர்பில், அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், ஐடன் அஸ்லின் பிரித்தானியர் என்பதால், தற்போதைய சூழலில் ரஷ்யா அவரை மிகக் கடுமையாக நடத்த வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், மேற்கத்திய நாடுகளின் உளவாளியாக இருக்க வாய்ப்புள்ளதாகவே ஐடன் அஸ்லின் தொடர்பில் ரஷ்யா தற்போது கூறி வருகிறது.
மட்டுமின்றி, ஐடன் அஸ்லின் பிரித்தானிய கூலிப்படை எனவும், உக்ரைனில் நாஜிகளுக்காக அவர் போரிட்டு வந்துள்ளார் எனவும் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் முதற்கட்டத்தில் இருப்பதாகவும், மேற்கத்திய நாடுகளின் உளவாளிகள் உக்ரைனில் ஊடுருவியுள்ளதை இவர் மூலம் ரஷ்யா அம்பலப்படுத்தும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனிடையே, ஐடன் அஸ்லின் மிகக் கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட களமிறக்கப்பட்டுள்ள ரஷ்ய துருப்புகளை கொலை செய்ததாக ரஷ்ய அதிகாரி ஒருவர் வினவ, அதற்கு பதிலாக அஸ்லின், நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் என கூறுகிறார்.
அவர் முகத்தில் இருக்கும் காயங்களும், ரஷ்ய அதிகாரிகளுக்கு அவர் அளிக்கும் பதில்களும், அவரை அவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றே தெரியவந்துள்ளது.
ரஷ்ய துருப்புகளிடம் சிக்குவதற்கு முன்னர், 48 நாட்கள் ஆகிறது, நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என ஐடன் அஸ்லின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.