பாம்பு தீவில் இருந்து வெளியேறிய ரஷ்ய படை: உக்ரைனுக்கு குவியும் பாராட்டு!
உக்ரைனிற்கு சொந்தமான பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் நல்லெண்ண அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடங்கிய சில வாரங்களிலேயே உக்ரைனுக்கு சொந்தமான பாம்பு தீவை ரஷ்ய படைகள் முழுவதுமாக ஆக்கிரமித்து, அதில் ரஷ்ய படைகளின் தற்காலிக ராணுவ தளங்களை அமைத்தனர்.
இருப்பினும் ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து அப்பகுதியை முழுவதுமாக மீட்கும் முயற்சியில் உக்ரைனிய படைகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வந்தனர்.
இந்தநிலையில், நல்லெண்ண அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறுவதாக ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது.
இந்த வெளியேற்றத்தை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், நன்மையின் சைகை என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த முடிவு முலம் உக்ரைனில் இருந்து விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யும், ஐ.நா.வின் மனிதாபிமான முயற்சிகளுக்கு ரஷ்யா எத்தகைய தடையும் விதிக்கவில்லை என்பதை நிரூபித்து இருப்பதாக ரஷ்ய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதை உக்ரைனும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை செய்து காட்டிய உக்ரைனிய ராணுவ படைகளுக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: நட்பு நாடுகளுக்கு அனுப்பப்படும் உணவு தானியங்கள்: ரஷ்யாவின் அத்துமீறல்!
இதுத் தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அலுவலக தலைவர் ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ள தகவலில், இனி பாம்பு தீவில் ரஷ்ய படைகள் இல்லை, எங்கள் ஆயுதப்படைகள் சிறப்பான வேலையை செய்துள்ளன எனத் தெரிவித்துள்ளார்.