காட்டில் விறகு சேகரித்த பெண் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்! குடும்பமே குதூகலம்
காட்டில் விறகு சேகரிக்க சென்ற ஏழைப்பெண் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன்படி அதிர்ஷ்டம் வாழ்க்கையில் ஒருமுறை தான் கதவை தட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணுக்கு பட்டை தீட்டாத வைரக்கல் கிடைத்திருக்கிறது.
ஜெண்டா பாய் என்ற பெண், தனது 6 குழந்தைகளையும் காப்பாற்ற தினமும் கூலி வேலைக்கு செல்கிறார். அவர் விறகு எடுக்க காட்டிற்கு சென்றபோது அங்கு பளபளப்பான கல்லைக் கண்டார்.
பின்னர் அதை வீட்டிற்கு எடுத்து வந்து கணவரிடம் காட்டிய போது தான் பட்டை தீட்டாத வைரக்கல் என தெரியவந்தது. இதையடுத்து ஏழ்மையிலும் நேர்மையாக இருந்த அந்தப்பெண், வைரத்தை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.
4.39 கேரட் எடையுள்ள அந்த வைரக்கல் மதிப்பு கிட்டத்தட்ட (ரூ. 91,16,395.22 இலங்கை மதிப்பில்) இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த வைரத்தை அதிகாரிகள் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளனர். அந்த பணம் ஜெண்டாவிடம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஜெண்டா பாய் கூறுகையில், ஏலத்தில் கிடைக்கும் பணத்தை எனது வீட்டின் கட்டுமானத்திற்கும் எனது மகள்களின் திருமணத்திற்கும் பயன்படுத்துவேன் என கூறினார்.
தனது மனைவிக்கு வைரம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ஜெண்டா பாயின் கணவர் தெரிவித்துள்ளார்.