வெளிநாட்டில் கணவர் வேலை, சுகபோக வாழ்க்கை நடத்திய பெண்! பெற்றோரை கொலை செய்யும் முயற்சியில் பறிபோன உயிர்
எட்டு லட்சம் நகைகளை அடமானம் வைத்து உல்லாச வாழ்க்கை நடத்திய இந்துலேகா
சொத்துக்காக ஆசைப்பட்டு பெற்ற தாயை தேநீரில் விஷம் வைத்து கொலை
இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் சொத்துக்காக பெற்றோரை கொலை செய்யும் முயற்சியில், தாய் இறந்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சந்திரன் - ருக்மினி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், இந்துலேகா என்ற மகளின் கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
தனது கணவருக்கு தெரியாமல் 8 லட்சம் நகைகளை வங்கியில் அடமானம் வைத்த இந்துலேகா, அந்த பணத்தைக் கொண்டு சுகபோக வாழ்க்கை நடத்தியுள்ளார். பின்னர் அவரால் நகையை மீட்க முடியாத நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்துலேகாவின் கணவர் ஊருக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பதறிப்போன இந்துலேகா,நகைகள் குறித்து கணவர் கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என்று புலம்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து பெற்றோரின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்று நகைகளை திருப்பி விடலாம் என்று எண்ணிய அவர், தனது தாயிடம் சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு தாய் ருக்மினி மறுத்துவிட்டார். இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இந்துலேகா, பெற்றோர் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி ருக்மினி தேநீரில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த அவர் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் தந்தைக்கும் விஷம் கலந்த தேநீரை கொடுத்துள்ளார். அதன் சுவை வித்தியாசமாக இருந்ததால் அவர் முழுமையாக குடிக்கவில்லை. எனவே அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.
இதற்கிடையில் மயங்கி விழுந்த தாய் ருக்மினியை மருத்துவமனைக்கு இந்துலேகாவே கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ருக்மினியின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் இந்துலேகாவிடம் விசாரணை நடத்தியபோது அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய பின்னர் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். சொத்துக்காக மகளே பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.