வெளிநாட்டில் சாப்பிட்ட உணவு: மூளையில் புழுக்களுடன் திரும்பிவந்த பெண்
வெளிநாடு ஒன்றிற்கு சுற்றுலா சென்ற ஒரு பெண், அங்கு சாப்பிட்ட ஒரு உணவால், மூளையில் புழுக்களுடன் நாடு திரும்பும் மோசமான நிலை அவருக்கு ஏற்பட்டது.
வெளிநாட்டில் சாப்பிட்ட உணவு
அமெரிக்காவிலுள்ள நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு 30 வயதுப் பெண், ஹவாய், ஜப்பான் மற்றும் தாய்லாந்துக்கு சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார்.
நாடு திரும்பிய அவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பாதங்களில் எரிச்சல் ஏற்பட, பின் உடல் முழுவதும் வலி பரவியுள்ளது.
ஆரம்ப கட்ட சிகிச்சை பலனளிக்காததால் அவரை தீவிர சோதனக்குட்படுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
மருத்துவப் பரிசோதனையில், அந்தப் பெண்ணின் மூளையில் Angiostrongylus cantonensis என்னும் உருளைப்புழுவின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
அந்தப் புழு அவரது மூளையில் ஏற்படுத்திய பாதிப்பால், அவரது கை கால்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டுள்ளது.
ஹவாயில் சமீப காலமாக இந்த உருளைப்புழு பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உருளைப்புழுக்கள் எலிகளை பாதிக்கும். பாதிக்கப்பட்ட எலிகளின் எச்சத்தில் இந்த கிருமிகள் காணப்படும்.
அந்த எலி எச்சத்தை நத்தைகள் உண்ணும்போது, அந்த நத்தைகளின் உடலுக்குள் அந்த உருளைப்புழுக்களின் லார்வாக்கள் சென்றுவிடும்.
இப்படி பாதிக்கப்பட்ட நத்தைகளை மனிதர்கள் சரியாக சமைக்காமல் சாப்பிடும்போது, அல்லது அந்த நத்தைகளின் எச்சம் பட்ட காய்கறிகளை சாப்பிடும்போது அவை மனிதர்களை பாதித்துவிடுகின்றன.
ஆக, வெளிநாட்டு சுற்றுலா சென்ற அந்தப் பெண் அங்கு நத்தையால் பாதிக்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் அவருக்கு உருளைப்புழு தொற்று ஏற்பட்டுள்ளது.
14 நாட்கள் ஸ்டீராய்டுகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டபிறகு அந்தப் பெண்ணின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், சரியான நேரத்தில் அவருக்கு என்ன பிரச்சினை என்பது கண்டுபிடிக்கப்பட்டு முறையான சிகிச்சை கொடுக்கப்பட்டதால் அவர் தப்பினார்.
இல்லையென்றால் அந்த உருளைப்புழுவின் தொற்று, மரணத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |