வயிற்று வலியுடன் மருத்துவரை நாடிய பெண்: 11 நாட்களில் மூன்று உறுப்புகளை இழந்த சோகம்
வயிற்று வலியால் மருத்துவமனைக்குச் சென்ற 11 நாட்களுக்குப் பிறகு பெண் ஒருவர் தனது மூன்று உறுப்புகளை இழந்த சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.
ஹங்கேரி நாட்டவரான 39 வயது மோனிகா டோத்னே என்பவரே மிக மோசமான சூழலில் தனது இரண்டு கால்களையும் ஒரு கையையும் அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் கடுமையான வயிற்று வலியால் மோனிகா அவதிப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையை நாடிய அவருக்கு, முதற்கட்ட சோதனைக்கு பிறகு அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது வயிறு துளையிடப்பட்டு சிதைந்திருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவரது வயிறு குடல் அழற்சி, புண், பித்தம் அல்லது காயம் காரணமாகவும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறும் மருத்துவர்கள், ஆனால் மோனிகாவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அவரது கை, கால்களில் இரத்தக் குழாய் அடைப்பு இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். மேலும் மருத்துவர்களால் அந்த அடைப்புகளை குணப்படுத்தவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மார்ச் 1ம் திகதி அவரது இடது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்த சில நாட்களில் அவரது வலது காலும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. மார்ச் 12ம் திகதி அவர் பயந்திருந்த அந்த செய்தியும் வந்துள்ளது.
மோனிகாவின் இடது கையும் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. மூன்று மாதங்களில் மோனிகா 16 அறுவை சிகிச்சைகளுக்கு இலக்கானார். தற்போது மோனிகாவின் தாயாரும் அவரது கணவரும் கவனித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.