சில விடயங்கள் எதிர்பாராத விதமாக நடக்கும்.. வன்கொடுமை குறித்து பெண் அமைச்சரின் சர்ச்சை கருத்து!
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து பெண் அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை, கர்ப்பிணிப் பெண் ஒருவரை ரயில் நிலையத்தில் மூன்று பேர் கூட்டு வன்கொடுமை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இதற்கு முன், பால்நாடு மாவட்டத்தில் தனது குழந்தையுடன் ரயில் நிலையத்தில் இருந்த பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தனதி வனிதா இந்த சம்பவங்கள் குறித்து பேசிய போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ' இந்த சம்பவங்களுக்கும் அரசு ரயில்வே காவல்துறை பணியாளர்கள் பற்றாக்குறைக்கும் தொடர்பு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கும் நோக்கத்துடன் ரயில்வே நிலையத்திற்கு வரவில்லை. அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர். கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அவர்கள் அந்த பெண்ணின் கணவனை சீண்டிய போது, அந்தப் பெண் குறுக்கிட்ட போது அந்த சம்பவம் நடந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில விடயங்கள் எதிர்பாராத விதமாக நடக்கும். இதற்கும், பொலீசார் பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை' என தெரிவித்துள்ளார்.
பெண் அமைச்சர் ஒருவரே இவ்வாறு பொறுப்பற்ற நிலையில் கருத்தை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.